×

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநகராட்சி முதல் பேரூராட்சி வரை பட்டியலின, பழங்குடியினர் பகுதிகளில் மேற்கொள்ளும் பணிகளுக்கு சலுகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மொத்த மக்கள்தொகையில் 50 விழுக்காட்டிற்கும் கூடுதலாக பட்டியலின, பழங்குடியினர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு பொதுமக்களின் பங்களிப்பு தொகை ஐந்தில் ஒரு பங்கு என குறைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நமக்கு நாமே திட்டத்தின் கீழ், நீர் நிலைகளை சீரமைத்தல், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களை நிறுவுதல், கடைகள் கட்டுதல் உள்பட பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், முதல்வர் கடந்த 7.1.2022 அன்று சட்டப்பேரவையில் உரையாற்றியபோது, “நமக்கு நாமே திட்டத்தின் கீழ் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்களுடைய பங்கு என்பதை பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஐந்தில் ஒரு பங்கு” என விதிகள் தளர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

இதன்படி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், குறிப்பிடப்பட்ட பகுதியின் மொத்த மக்கள்தொகையில் 50 விழுக்காட்டிற்கும் கூடுதலாக பட்டியலின மற்றும் பழங்குடியினரின் மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பணிக்கும், பொதுமக்களின் குறைந்தபட்ச பங்களிப்பு தொகையினை, பணி மதிப்பீட்டு தொகையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20 விழுக்காடு என்ற அளவிற்கு குறைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், பொதுமக்கள் பங்களிப்பிற்கான உச்சவரம்பு ஏதுமில்லை. இதனடிப்படையில், திட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உரிய திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்நடவடிக்கை, பட்டியலின மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அதிகளவிலான பொதுமக்களின் பங்கேற்பினை ஊக்குவித்து, இப்பகுதிகளுக்கு அதிகளவில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதுவாக அமையும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநகராட்சி முதல் பேரூராட்சி வரை பட்டியலின, பழங்குடியினர் பகுதிகளில் மேற்கொள்ளும் பணிகளுக்கு சலுகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,Dinakaran ,
× RELATED மக்கள் நம்பிக்கை வைத்து...