×

டெல்லி அரசு, ஆளுநர் இடையிலான மோதல் வழக்கில் மாநில அரசுக்கு தான் அதிகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது, மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டங்களை இயற்ற மாநில சட்டமன்றத்திற்கு தான் அதிகாரம் இருக்கிறது என டெல்லி அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் இடையிலான மோதல் போக்கு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. டெல்லியில் ஒன்றிய அரசின் துணை நிலை ஆளுநர் பெரும்பாலான முடிவுகளை எடுத்தும், முக்கிய பொறுப்புகளுக்கு அதிகாரிகளை நியமித்தும் வந்ததால் துணை நிலை ஆளுநருக்கும், மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கிடையே அதிகாரப் பிரச்னை ஏற்பட்டது.
டெல்லி அமைச்சரவை ஒரு முடிவை எடுக்கும்போது அதனை துணை நிலை ஆளுநர் நிறைவேற்ற தாமதம் செய்து ஒத்துழைக்க மறுப்பதாக ஆம் ஆத்மி அரசு தரப்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஹீமா கோலி ஆகியோர் அமர்வு, டெல்லியில் நிர்வாக சேவைகள் மீது நடவடிக்கைகள் எடுக்க யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த ஆண்டு மே மாதம் 6ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கை பல கட்டங்களாக விசாரணை நடத்தி வாதங்களை பதிவு செய்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஜனவரி 18ம் தேதி ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி, ஹீமா கோலி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு விவரம் வருமாறு: இந்த வழக்கு நாட்டில் சமச்சீரற்ற மாதிரியாக கூட்டாட்சி நிர்வாகத்தை கையாள்வதை காட்டுகிறது. டெல்லியில் நிர்வாக சேவைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது தான் இங்கு பிரச்னையாக உள்ளது. அது டெல்லி அரசாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் துணை நிலை ஆளுநராக இருந்தாலும் சரி. அனைவருக்கும் சமமான ஒன்றாக இருக்கிறது. இந்த வழக்கை பொறுத்தமட்டில் அனைத்து சேவைகளிலும் டெல்லி அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கடந்த 2019ல் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சோக்பூஷண் வழங்கிய தீர்ப்பில் நாங்கள் உடன்படவில்லை. அதை ஏற்கவும் முடியாது. இந்த விவகாரம் இந்தியாவின் கூட்டாட்சியின் மாதிரியாகும்.

மேலும் மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி அரசுக்கு உண்டு. அதற்கான அதிகாரம் சட்டபேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கையில் இது ஒரு பகுதியாகும். கூட்டாட்சியானது பல்வேறு நலன்களின் உயிர்வாழ்வை உறுதி செய்கிறது. அதேப்போன்று தேவைகளுக்கும் இடம் அளிக்கிறது. குறிப்பாக மாநில அரசுகளின் நிர்வாகத்தை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜனநாயக ஆட்சி முறையில் உண்மையான நிர்வாக அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கையில் தான் இருக்க வேண்டும்.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் அதிகார வரம்புக்குள் அதிகாரிகள் இல்லை என்றால், அந்த அரசின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். ஒரு அமைச்சரின் கீழ் செயல்படும் அதிகாரி அந்த அமைச்சரின் உத்தரவுகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் ஒருங்கிணைந்த உறுதிப்பாடு என்ற கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டு விடும். அந்த அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது. எனவே, டெல்லி அரசு அதிகாரிகள் மீது அதிகாரம் செலுத்த டெல்லி அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. மேலும் மாநில அரசுகளுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஆனால் அதேநேரத்தில் மாநில அரசு நிறைவேற்றும் சட்டங்கள் ஒன்றிய அரசின் சட்டத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கிறது’ என உத்தரவிட்டனர். இருப்பினும் ‘டெல்லியின் ஆட்சி அதிகாரத்தில் பொது அமைதி, காவல் மற்றும் நிலம் ஆகியவை ஒன்றிய அரசின் வரம்புக்குள் வருவதால் அதன் மீது டெல்லி அரசு தலையிட முடியாது’ எனவும் நீதிபதிகள் வழங்கிய உத்தரவில் விளக்கம் அளித்துள்ளனர்.

The post டெல்லி அரசு, ஆளுநர் இடையிலான மோதல் வழக்கில் மாநில அரசுக்கு தான் அதிகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Delhi government ,government ,Supreme Court ,New Delhi ,Union Government ,State Government ,
× RELATED பாஜக அரசியல் வேற்றுமையை ஒத்திவைத்து...