×

பழநி மலைக்கோயிலில் காலிப்பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை ரத்து செய்யமுடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், பழநி நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பழநி தண்டாயுதபாணி கோயிலில் நூலகர், அலுவலக உதவியாளர், சமையலர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 41 வகை பணிகளுக்கான 281 காலிப்பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதில், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உள் இட ஒதுக்கீடு அறிவிப்பு இல்லை. விண்ணப்பதாரர், அவரது குடும்பத்தார் மற்றும் வாரிசுதாரர்கள் கோயிலுக்கு எதிராக எந்த வழக்கும் தொடர்ந்து இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அடிப்படை உரிமை மீறல். எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்து, விதிமுறைகளை பின்பற்றி புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகள் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், எஸ்.ஸ்ரீ மதி, ‘‘இந்த வழக்கு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் வேலை கேட்டு விண்ணப்பிக்கவோ, பாதிக்கவோ இல்லை. எனவே, அறிவிப்பை ரத்து செய்ய முடியாது. விண்ணப்பதாரர்கள், அவர்களது குடும்பத்தினர் கோயிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ தொடர்ந்திருக்க கூடாது என்ற நிபந்தனையை பின்பற்ற வேண்டியதில்லை’’ எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்.

* போகர் ஜெயந்தி விழாவுக்கு அனுமதி
கரூர் அப்பிபாளையத்தைச் சேர்ந்த சிவசுவாமி என்பவர், ‘‘பழநி மலைக்கோயில் போகர் சன்னதியில் மே 18ல் போகர் ஜெயந்தி விழாவை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல் சிவானந்தா புலிப்பாணி சுவாமிகள் தரப்பில், போகர் ஜெயந்தி விழா கொண்டாட அனுமதி மறுத்த இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்து, அனுமதிக்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி ஆகியோர், போகர் சன்னதி மற்றும் அங்குள்ள மண்டபத்தில் வரும் 18ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் போகர் ஜெயந்தி விழா கொண்டாட அனுமதித்து உத்தரவிட்டுள்ளனர்.

The post பழநி மலைக்கோயிலில் காலிப்பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை ரத்து செய்யமுடியாது: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Palani hill temple ,ICourt ,Madurai ,Ravichandran ,Dindigul ,Palani Neykarapatti ,ECourt ,Palani Dandayuthapani ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...