×

பழநி மலைக்கோயிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பை ரத்து செய்ய ஐகோர்ட் கிளை மறுப்பு

மதுரை: பழநி மலைக்கோயிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பை ரத்து செய்ய ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்து, பணி நியமனங்களில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இங்கு நூலகர், அலுவலக உதவியாளர், சமையலர், கணினி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர்கள், நாதஸ்வர வித்துவான், தவில் வித்வான், தாளம் வித்வான், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 41 வகையான பணியிடங்களில், 281 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.

இதில், பெண்கள், மாற்றுத்திறனாளி ஆகியோருக்கான உள் இடஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மேலும், விண்ணப்பதாரர், அவரது குடும்பத்தார், அவரது வாரிசுதாரர்கள் கோயிலுக்கு எதிராக எந்த வழக்கும் தொடர்ந்து இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்து, விதிமுறைகளை பின்பற்றி புதிதாக அறிவிப்பு வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.மதி, ‘இந்த வழக்கு பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர் வேலை கேட்டு விண்ணப்பிக்கவில்லை; பாதிக்கப்படவும் இல்லை. எனவே, இந்த அறிவிப்பிற்கு தடை விதிக்க முடியாது. அதே நேரம் விண்ணப்பதாரர்கள், அவர்களது குடும்பத்தினர் கோவிலுக்கு எதிராக புகாரோ, வழக்கோ பதிந்து இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்ற நிபந்தனை அடிப்படை உரிமை மீறலாகும். எனவே, இந்த நிபந்தனையை இந்து அறநிலையத்துறை ஆணையர் நீக்கி உத்தரவிட வேண்டும். பணி நியமனங்களில் வெளிப்படை தன்மை வேண்டும்’ எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்.

The post பழநி மலைக்கோயிலில் காலிப்பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பை ரத்து செய்ய ஐகோர்ட் கிளை மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Aicort Branch ,Palani Malaikoil ,Madurai ,Eicort Branch ,Badani Malaikhoil ,Palanini Mountains ,Dinakaran ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்