×

திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

பல்லாவரம், மே 11: திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயிலில் நேற்று காலை சித்திரை பிரமோற்சவ தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பெருமாள் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்னும் 4 நிலைகளில் நீர்வண்ணபெருமாள், நரசிம்மர், அரங்கநாதன், உலகளந்த பெருமாளாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இத்தலம் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் பிரமோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். இதை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறும். கடந்த மாதம் நீர்வண்ணபெருமாளுக்கு பிரமோற்சவம் நடந்து, தேரோட்டம் நடந்த நிலையில், சித்திரை மாதம் ரெங்கநாத பெருமாள் பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் பிரமோற்சவத்தின் 7ம் நாளான நேற்று காலை தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக காலை 5 மணிக்கு ரெங்கநாத பெருமாளும், தாயாரும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதை தொடர்ந்து காலை 7 மணிக்கு பக்தர்கள் ‘‘கோவிந்தா” கோஷம் விண்ணை முட்ட வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் திருநீர்மலையை சுற்றி முக்கிய வீதிகளில் வலம் வந்தது.

தேர் இழுத்த பக்தர்களுக்கு அப்பகுதி மக்கள் மோர், ரோஸ் மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டது. இதில், செங்கல்பட்டு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லெட்சுமி காந்தன் பாரதிதாசன், செயல் அலுவலர் கிருஷ்ணன், ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சங்கர்நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர் appeared first on Dinakaran.

Tags : Tiruneermalai Renganatha ,Perumal ,Temple ,Pallavaram ,Brahmotsava ,Tiruneermalai Renkanatha Perumal temple ,Thiruneermalai Renganatha Perumal Temple ,
× RELATED வரதராஜ பெருமாள் கோயில் கருடசேவை...