×

இளம்பெண் உள்பட 3 பேரிடம் ₹38 லட்சம் நூதன மோசடி

கிருஷ்ணகிரி, மே 11: ஓசூர் லட்சுமி நரசிம்மநகரைச் சேர்ந்தவர் சுரேஷ்பழநி. இவர் கெலமங்கலத்தில் உள்ள கிரானைட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், பணம் முதலீடு செய்தால் குறைந்த காலத்தில் அதிகவட்டி மற்றும் பலரை முதலீடு செய்ய வைத்தால் கமிஷன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுரேஷ்பழநி, ₹7.73 லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார். ஆனால் அதன் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ்பழநி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இதேபோல் ஓசூர் முக்காண்டப்பள்ளி ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் விஸ்வம். இவரது மனைவி ஞானஈஸ்வரி (36). தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் இவர் தனது செல்போன் வாட்ஸ்அப்பிற்கு வந்த குறுந்தகவலை நம்பி, அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ₹5.85 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். ஆந்திர மாநிலம் கொனப்புரத்தைச் சேர்ந்தவர் சிவலீலா (30), சூளகிரி மில்லத்நகரில் தங்கி பெங்களூரு சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது வாட்ஸ்அப்பிற்கு மெசேஜ் ஒன்று வந்த நிலையில், அதில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சிவலீலா குறிப்பிட்ட செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசி, அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கில் ₹24.72 லட்சம் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதன்பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவலீலா, நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post இளம்பெண் உள்பட 3 பேரிடம் ₹38 லட்சம் நூதன மோசடி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Sureshpalani ,Hosur ,Lakshmi Narasimhanagar ,Kelamangalam ,Dinakaran ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்