×

சேலம் மாவட்டத்தில் தொன்மை சார் உணவகம் அமைக்க சூரமங்கலம் உழவர்சந்தை தேர்வு

சேலம், மே 11: சேலம் மாவட்டத்தில் தொன்மை சார் உணவகம் அமைக்க சூரமங்கலம் உழவர்சந்தை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.உழவர்சந்தை என்பது தமிழ்நாடு அரசால் 1999ம் ஆண்டு முதல் காய்கறிகள், பழங்கள் பயிரிடும் விவசாயிகள் அவர்கள் பயிர் செய்தவற்றை அவர்களே இடைத்தரகர்கள் யாருமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக தமிழகத்தில் பல பகுதிகளில் இடங்களில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 183 உழவர்சந்தைகள் செயல்பட்டு வருகிறது. உழவர்சந்தைகள் தற்போது நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. காய்கறிகளின் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ள டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. காய்கறிகள் பதப்படுத்தும் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அழுகிய, நாள்பட்ட காய்கறிகளை அங்கேயே அழித்து உரமாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாலை நேர உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது வேளாண்மைத்துறை வேளாண் வணிகத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 25 உழவர்சந்தைகளில் தொன்மை சார் உணவகம் கொண்டு வர தமிழ்நாடு அரசு முயற்சி ேமற்கொண்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் ஒரு உழவர்சந்தையில் தொன்மை சார் உணவகம் அமைக்க வேளாண் வணிகத்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து சேலம் மாவட்ட உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் தனியார் பங்களிப்புடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் 2023-24ம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் கடந்த மார்ச் 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். முதல் கட்டமாக 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

முதற்கட்டமாக கோவை, திண்டுக்கல், ஈரோடு, குமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரியில் உணவகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருப்பூர், திருச்சி, வேலூர் நெல்லையிலும் தொன்மை சார் உணவகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தையில் அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே தொன்மைசார் உணவகம் செயல்படும். சிறுதானிய உணவகத்திற்கு இலக்கிய நயம் சார்ந்த பெயர் சூட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பை, டம்ளருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறுதானிய உணவுகள், புவிசார் குறியீடு பெற்ற உணவு பொருட்களை விற்க வேண்டும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர்சந்தையில் இந்த ெதான்மைசார் உணவகம் அமைக்கப்படுகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம் உழவர்சந்தையில் தொன்மை சார் உணவகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொன்மைசார் உணவகம் அமைப்பதற்கான இடத்தை வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர். இடம் தேர்வு செய்த பின், டெண்டர் அறிவிக்கப்படும். டெண்டர் எடுக்கும் நபர் தொன்மை சார் உணவகம் அமைப்பார்கள். அந்த உணவகத்தில் அரசாணையில் கூறப்பட்டுள்ள உணவை மட்டுமே அவர்கள் விற்க வேண்டும். மேலும் அரசு நிர்ணயித்த விலையில் பொருட்களை விற்க வேண்டும். அதை மீறி செயல்பட்டால் அவர்கள் நடவடிக்கை வேளாண் வணிகத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சேலம் மாவட்டத்தில் தொன்மை சார் உணவகம் அமைக்க சூரமங்கலம் உழவர்சந்தை தேர்வு appeared first on Dinakaran.

Tags : Suramangalam ,market ,Salem district ,Salem ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்