×

பல்வேறு குறைபாடு எதிரொலி மின் மீட்டர்களை பரிசோதிக்க 7 ஆய்வகத்துக்கு அனுமதி: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தகவல்

சென்னை: மின் மீட்டர்களில் ஏற்படும் குறைபாடுகளை பரிசோதனை செய்ய 7 அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் மின்சார அளவுகளை கணக்கிட தற்போது தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஸ்டெடிக் மீட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு மின்வாரியம் தரப்பில் பொறுத்தப்படும் மீட்டர்களில் சில இடங்களில் மின் கணக்கீட்டில் முரணான தகவல் கிடைக்கும் பட்சத்தில் மின்வாரிய ஊழியர்களே அந்த மீட்டர்களை ஆய்வு செய்வது வழக்கம். சில நேரங்களில் மின் மீட்டர்களில் குறைபாடு, மின் கணக்கீடு சரியாக இல்லை என நுகர்வோர் புகார் அளிக்கும் பட்சத்தில் மின்வாரியத்தின் ஆய்வகத்தில் சிறப்பு பரிசோதனை நடத்துவதற்கும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் மீட்டர்களில் குறைபாடு இருந்தால் அவை மாற்றப்படும். மீட்டர்கள் மாற்றப்படும் காலம் வரை முந்தைய பயன்பாடு அளவு கொண்டு கட்டணம் வசூலிக்கப்படும். மீட்டர்கள் சரியாக இருந்தால் மீண்டும் பொறுத்தப்படும். மின்வாரிய சோதனையின் முடிவில் நுகர்வோருக்கு திருப்தி இல்லையென்றால் ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் மீண்டும் பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த சோதனைகளை மேற்கொள்ள ஆய்வங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் சான்றிதழ் பெற்ற ஏழு சோதனைக் கூடங்களின் விவரங்களை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை மற்றும் நெல்லை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகங்களில் உள்ள அரசு ஆய்வகங்கள் மற்றும் சென்னையில் மூன்று ஆய்வகங்கள், நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று என தனியாருக்கு சொந்தமான ஐந்து ஆய்வங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழ் செல்லும் காலஅவகாசம், போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: மின் வாரியத்தின் சோதனை முடிவுகளை ஏற்க மறுக்கும் நுகர்வோர், அவர்கள் விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் சோதனைகளை மேற்கொள்ளலாம். மின்வாரிய ஆய்வகத்தின் சோதனை முடிவும், 3ம் தரப்பு ஆய்வகத்தின் சோதனை முடிவும் ஒன்றாக இருந்தால் சோதனைக்கான செலவை நுகர்வோர் ஏற்க வேண்டும். இல்லையென்றால், மின்வாரியமே செலவுகளை ஏற்கும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மின் வாரியத்தின் சோதனை முடிவுகளை ஏற்க மறுக்கும் நுகர்வோர், அவர்கள் விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் சோதனைகளை மேற்கொள்ளலாம்.

The post பல்வேறு குறைபாடு எதிரொலி மின் மீட்டர்களை பரிசோதிக்க 7 ஆய்வகத்துக்கு அனுமதி: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Electrical Regulatory Commission ,Chennai ,Electricity Regulatory Commission ,Electrical Regulatory Authority ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...