×

அரியலூர் அருகே கோயிலில் 11 ஆண்டுக்கு முன் திருடுபோன ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து கடந்த 2012ம் ஆண்டு வரதராஜ பெருமாள், தேவி, பூதேவி, ஆஞ்சநேயர் ஆகிய உலோக சிலைகள் திருடு போனது. அவைகளில் ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு பின்னர் ஏலம் விடப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், ஆஞ்சநேயர் சிலையை ஆஸ்திரேலியாவில் தனி நபர் ஒருவர் வைத்திருப்பது தெரிய வந்தது. அந்த சிலையை மீட்க போலீசார் உரிய நடவடிக்கை எடுத்தனர். இதைத்தொடர்ந்து சிலையை வைத்திருந்த நபர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் சிலையை ஒப்படைத்தார்.

பின்னர் தமிழகம் கொண்டு வரப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து நேற்று சிலையை வெள்ளூருக்கு கொண்டு வந்து கிராம மக்கள் முன்னிலையில் வரதராஜபெருமாள் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஒப்படைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘இந்த சிலையின் மதிப்பு ₹15 லட்சம் இருக்கலாம். இது 16, 17ம் நூற்றாண்டை சார்ந்த உலோக சிலையாகும். இதேபோல், பல்வேறு சிலைகள் அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளது. அவற்றையும் இந்தியா கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

The post அரியலூர் அருகே கோயிலில் 11 ஆண்டுக்கு முன் திருடுபோன ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Australia ,Ariyalur ,Varadaraja Perumal Temple ,Thuvur ,Sendura, Ariyalur district ,
× RELATED காஞ்சிபுரத்தில் வரும் 20ம்தேதி வரதராஜ...