இடைப்பாடி: இடைப்பாடியில் வங்கி கேஷியர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள பெருமாள் கோயில் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம்மாள் (60). இவரது கணவர் மாதையன், இடைப்பாடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி ஓய்வு பெற்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது மகன் சிவா (34), திருவண்ணாமலையில் உள்ள கனரா வங்கியில் கேஷியராக பணியாற்றி வருகிறார். சுந்தரம்மாள் வீட்டின் அருகில் மளிகை கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு சுந்தரம்மாள், மகனை பார்க்க திருவண்ணாமலை சென்றுவிட்டார். இதனிடையே இன்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த பக்கத்து வீட்டினர் இடைப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கதவு பூட்டப்பட்டுள்ள நிலையில் அதன் மேல் பகுதியை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.22ஆயிரம் மதிப்புள்ள டிவி, பீரோவில் இருந்த 2.5 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
இதுபற்றி சுந்தரம்மாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் வந்த பின்னர் தான் என்னென்ன திருடுபோய் உள்ளது என்பது தெரியவரும். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வீடு பூட்டி கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post வங்கி கேஷியர் வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை: இடைப்பாடியில் துணிகரம் appeared first on Dinakaran.
