×

இந்து கடவுள்களை இழிவுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை: ஒரு மதத்தை இழிவுபடுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. அவ்வாறு ஒருவர் ஒரு மதத்தை இழிவுபடுத்திப் பேசினால் அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு. விடுதலை என்னும் புனைப்பெயரில் ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் இதிகாச புராணமான ராமாயணத்தையும், மக்கள் வணங்கக்கூடிய ராமர், லட்சுமணர், சீதை, அனுமன் போன்ற இந்துக் கடவுள்களை இழித்தும், பழித்தும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. இது, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது.

இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காவல் துறையினரிடம் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தினரை புண்படுத்திப் பேசினாலும் அதனை அதிமுக எதிர்க்கும். இதுபோன்ற செயல்பாடுகள் சட்டம் ஒழுங்கை சீரழிக்கவும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும், மத மோதல்களை உருவாக்கவும் வழி வகுக்கும் என்பதால், தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாகத் தலையிட்டு இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தியவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

The post இந்து கடவுள்களை இழிவுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Hindu ,Chennai ,O. ,Bannir ,
× RELATED சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவிக்கு...