×

தீராத துன்பம் தீர தீர்த்தத்தைப் பாருங்கள்!

சென்ற வாரம் தினம் காலையில் பார்க்கவேண்டிய சில பொருட்களைப் பற்றிப் பார்த்தோம். காலையில் அடுத்த தரிசனமாக தூய்மையான பாலைத் தரிசனம் செய்ய வேண்டும். `ஷீர தரிசனம்’ என்று சொல்வார்கள். அடுப்பில் பால் இருந்தால் அதை ஒரு பாத்திரத்தில் வைத்து அந்த பாலை ஒரு சில வினாடிகள் பார்ப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சுத்த சத்துவ குணம் வளரும். சத்துவ குணம் வளர்ந்தால் மனதில் தெளிவு வரும். தெளிவு வந்தால் எதையும் தீர்க்கமாக முடிவு செய்ய முடியும்.

லஷ்மீம் ஷீர சமுத்திர ராஜ தனயாம் ஸ்ரீரங்க தாமேஸ்வரீம்
தாஸி பூத சமஸ்த தேவவனிதாம் லோகைங்க தீபாங்குராம்
ஸ்ரீமந் மந்த கடாப்ஷலப்த விபவ பிரம்மேந்திர கங்காதராம்
திரைலோக்கிய குடும்பினீம் சரஸிஜாம் வந்தே முகுந்தப் பிரியாம்

என்ற ஸ்லோகத்தை அப்போது சொல்லலாம். மஹாலட்சுமியின் பூரண அருள் கிடைக்கும். அதற்கு பிறகு புஷ்பங்களைத் தரிசனம் செய்ய வேண்டும். தினமும் பூஜைக்கு நாம் பல வண்ண புஷ்பங்களை சேகரித்து வைத்திருப்போம். அவற்றை யெல்லாம் ஒரு தட்டில் பரப்பி ஒரு மேஜை மீதோ அல்லது உயர்ந்த ஒரு இடத்திலோ வைத்து அவற்றை ஒருதரம் கண்கொண்டு பார்க்க வேண்டும்.

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர்
இருவாட்சி
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே

என்ற பாடலை அப்போது சொல்லலாம். பூக்கள் சிரிப்பது போல மனம் புன்னகைக்கும். பிரச்னைகள் பெரிதாகத் தெரியாது. புஷ்ப தரிசனம் பார்ப்பதன் மூலமாக நம்முடைய மனதானது அற்புதமாக மலரும். ஒரு மலரினுடைய ஆனந்தமும், விகசிப்பும், பரிமாணமும், வண்ணமும் நம்முடைய மனதில் புகுந்து, நம்முடைய நேர்மறை சக்திகளை அதிகரிக்கும். நம்முடைய செயல் திறனை அதிகரிக்கும். நம்முடைய சிந்தனையானது விரியும். அதற்கு அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது தீர்த்த தரிசனம். அக்காலத்தில் பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரம் அல்லது குளக்கரை ஓரத்தில் வீடுகள் இருந்தன.

கிராமங்களிலே கோயில் குளத்தைச் சுற்றி வீடுகள் இருக்கும். முதலில் அந்த தீர்த்தத்தைத் தரிசனம் செய்ய வேண்டும் என்பார்கள். பகவானுக்கு `தீர்த்தன்’ என்று பெயர். இந்த உயிர் வாழ்வதற்கு அடிப்படையான விஷயம் தீர்த்தம்தான். நம் உடம்பின் பெரும் பகுதி தண்ணீர்தான். நாம் இப்பொழுது அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறோம். ஒரு புஷ்கரணியைப் பார்ப்பதோ இல்லை ஒரு நீரோடையைப் பார்ப்பதோ நமக்கு இப்பொழுது துர்லபமாக இருப்பதால் ஒரு பாத்திரத்தில் தூய்மையான நீரை நிரப்பி ஒரு சில நிமிடங்கள், அந்த தீர்த்தத்தைத் தரிசனம் செய்து வணங்குங்கள். இன்றும் சிலர் வாஸ்து சாந்தியாக ஒரு அகன்ற பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் சில மலர்களைத் தூவி பூஜை அறையிலும் வரவேற்பறையிலும் வைப்பார்கள். வண்ண நீரூற்று பார்த்தால் எண்ணம் விரியும்.

சில பங்களாக்களில் அல்லது ஹோட்டல்களில் ஒரு சின்ன நீரூற்றோ இல்லை ஒரு சின்ன குளம் போன்ற அமைப்பில் தாமரை இலைகளும் மலர்களும் இட்டு வைப்பதோ இருக்கும். இன்னும் சிலர் மேலிருந்து தண்ணீர் கீழே வருவது போல ஒரு அமைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பார்கள். எத்தனை கோபமும் மனப்பதற்றமும் இருந்தாலும் இந்த தண்ணீரை கண்டவுடன் எல்லாம் அமைதியாகி விடும். நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதால் அப்படி ஒரு ஏற்பாடு. மனம் அமைதி பெறவும், ஆன்மிக எண்ணம் அதிகரிக்கவும், யாத்திரை செல்வார்கள். அந்த யாத்திரைக்கு தீர்த்த யாத்திரை என்றுதான் பெயர்.

ஒரு ஊருக்குப் போனால், முதலில் அந்த ஊரில் உள்ள தீர்த்தத்தைத் தரிசிப்பது முதல் தரிசனமாக இருக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இன்னும் அழுத்தமாகக் கூட நாம் சொல்ல முடியும். சென்னையில் எங்கே கூட்டம் அதிகம் என்று பாருங்கள். மாலை வந்துவிட்டால், கடற்கரைக்குச் சென்று, அங்கே அமர்ந்து, நீலக்கடலைப் பார்க்கின்றபொழுது, நம்முடைய மனம் லேசாக இருக்கும். அதைப்போல பல கிராமங்களில் ஆற்றங்கரையிலும் குளத்தங்கரையிலும் மக்கள் அமர்ந்து தண்ணீரைப் பார்த்து ரசிப்பார்கள். எத்தனை கவலை இருந்தாலும் ஒரு அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ தண்ணீரைப் பார்க்கின்ற பொழுது நமக்கு ஒரு தெளிவு பிறந்து முடிவு கிடைக்கும். குழப்பங்கள் தீரும். மனம் பதட்டத்தோடும் சஞ்சலத்துடனும் இருக்கின்ற பொழுது, தண்ணீரைப் பார்க்க வேண்டும்.

அல்லது பருக வேண்டும். கோபத்துடன் இருக்கின்ற பொதும், உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும் பொழுதும், குளிர்ந்த நீர் ஒரு டம்ளர் பருகிவிட்டால் மனம் ஆசுவாசமாகும். அமைதி அடையும். செய்வது, நல்லதா கெட்டதா என்கிற தெளிவு பிறக்கும். நம்முடைய மரபில் ஒரு விருந்தினரோ அல்லது உறவினரோ வீட்டுக்கு வந்து விட்டால், அவரை உட்காரவைத்து, முதலில் காபி பலகாரம் தர மாட்டார்கள். அவருக்கு முதலில் தீர்த்தத்தைத்தான் கொடுப்பார்கள். அவர் என்ன நோக்கத்திற்காக வந்திருந்தாலும், அது நமக்கு இணக்கமாக, அனுமன் ராம லட்சுமணர்களிடம் சொன்னது போல், ‘‘தங்கள் வரவு நல்வரவாக வேண்டும்’’ என்பதை, ஒரு குறியீடாகச் சொல்வதுதான் முதலில் ஒரு குவளையில் தண்ணீர் தந்து அவரை உபசரிப்பதன் நோக்கம்.

ஒரு பெரியவரை வரவேற்க வேண்டும் என்று சொன்னால், ஒரு சிறு குடத்திலோ அல்லது சொம்பிலோ நீரை நிரப்பி, மாவிலையைச் செருகி, ஒரு தேங்காயை வைத்து, பூரணகும்ப மரியாதை தருவார்கள். அதிலும் தீர்த்தம்தான்.

தீர்த்தனுக்கு அற்றபின் மற்றுஓர்
சரணில்லை என்றுஎண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தன னாகிச்
செழுங்குரு கூர்ச்சட கோபன்சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவைபத்தும்
வல்லார்களைத் தேவர்வைகல்
தீர்த்தங் களேஎன்று பூசித்து
நல்கி யுரைப்பர்தம் தேவியர்க்கே.

என்று நம்மாழ்வார் தீர்த்தங்களின் பெருமையைச் சொல்லுகின்றார். அதற்கடுத்து ஆகாய தரிசனம். நம்முடைய சம்பிரதாயத்திலே வணக்கம் சொல்லுகின்ற பொழுது “நம: திவே நம: பிரதிவ்யை” என்று இரண்டு விஷயங்களைச் சொல்லுவோம். திவி என்றால் ஆகாயம். பிரதிவி என்றால் பூமி. பூமியைத் தொட்டு வணங்க வேண்டும். ஆகாயத்தைப் பார்த்து வணங்க வேண்டும். இந்த ஆகாயம் நமக்கு எல்லையற்ற ஆற்றலைத் தருகிறது. வீடுகளில் முற்றம் வைத்து ஆகாய தரிசனம் செய்யும் வசதியோடு (OTS-Open to Sky) அக்காலத்தில் வீடு கட்டியிருப்பார்கள். ஆகையினால் ஆகாய தரிசனத்தைச் செய்வது முக்கியமானது.

அதற்கடுத்து சந்திர தரிசனம் பார்க்க வேண்டும். சூரிய தரிசனத்தைப் போலவே சந்திர தரிசனத்தைச் செய்ய வேண்டும். சூரியன் ஆத்மாவுக்கு காரகன். சந்திரன் மனதுக்கும் செயல்களுக்கும் காரகன். மனது மகிழ்ச்சியாக இருந்தால் செயல்கள் நேர்த்தியாக இருக்கும். சந்திர தரிசனம் செய்ய வேண்டும் என்றே பஞ்சாங்கத்தில் போட்டிருக்கும். அமாவாசை முடிந்து சந்திர தரிசனம் என்கிற நாளிலே, பிறைச் சந்திரனைப் பார்ப்பது என்பது மிகவும் சிறப்பு. இது தவிர, நீங்கள் பௌர்ணமி வரையில் ஒவ்வொரு நாளும் மாலையில் ஒரு சில நிமிடங்கள் சந்திரனை தரிசித்து, அதனுடைய வளர்ச்சியை பார்ப்பதன், மூலமாக உங்களுடைய வாழ்க்கையிலும் நீங்கள் வளர்ச்சியை சந்திப்பீர்கள்.

ஆயிரம் பிறை கண்டவர்களுக்குத்தான் சதாபிஷேக வைபவத்தை நடத்துகின்றார்கள். ஆயிரம் பிறை கண்டவர்களை நானும் தரிசிக்கிறேன் என்று கண்ணன் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்பொழுது நாகரீகம் அதிகமாகிவிட்டது. குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறூட்டும் தாய்மார்கள் குறைந்துவிட்டார்கள். ஆனால் நிலாவைக் காட்டி சோறூட்டுவது என்பது வெறுமனே வேடிக்கைக்காக அல்ல. சிறு குழந்தை சந்திர தரிசனம் செய்ய வேண்டும். அதன் மூலமாக அந்தக் குழந்தைக்கு மகத்தான நன்மைகள் ஏற்படும் என்கின்ற சாத்திர ரீதியான காரணமும் அங்கு உண்டு. இன்னும் சில தரிசனங்களைக் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post தீராத துன்பம் தீர தீர்த்தத்தைப் பாருங்கள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருமுறைகளில் கஜசம்ஹாரம்