×

₹30 கோடி செலவில் 62 ஏக்கரில் அமைந்துள்ளது ஜம்முவில் வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலுக்கு மகா சம்ப்ரோக்‌ஷணம்

*ஜூன் 8ம் தேதி நடக்கிறது

திருமலை : ஜம்முவில் ₹30 கோடி செலவில் 62 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலுக்கு ஜூன் 8ம் தேதி மகா சம்ப்ரோக்‌ஷணம் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா தெரிவித்துள்ளார்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஜம்முவில் உள்ள மசீன் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலின் மகாசம்ப்ரோக்‌ஷணம் ஜூன் 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ஒய்.வி.சுப்பா நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தொலைதூரத்தில் இருந்து திருமலைக்கு வர முடியாத பக்தர்களுக்காக நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஜம்மு அரசு 62 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து வழங்கிய இடத்தில் ₹30 கோடி செலவில் கோயில் மற்றும் அதனை சார்ந்த துணை சன்னதிகள், மடப்பள்ளி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இக்கோயிலில் ஜூன் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஜூன் 8ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை மகாசம்ப்ரோக்‌ஷணம் நடைபெறும். மதியம் 12 மணி முதல் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள். புகழ்பெற்ற வைஷ்ணோ தேவி கோயிலுக்கு செல்லும் ஜம்மு – கத்ரா வழித்தடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. எனவே அங்கு செல்லும் பக்தர்கள் இங்கு வெங்கடேஸ்வரா சுவாமியை தரிசித்து செல்லலாம். இந்த கோயில் நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் இங்கு 24 மணி நேர நிரந்தரப் பாதுகாப்பை வழங்குமாறு ஜம்மு அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தர்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து முக்கிய பகுதிகளிலும் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் சமீபத்தில் சென்னை, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், அமராவதி மற்றும் பிற பகுதிகளில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. மும்பையில் விரைவில் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்படும். அதேபோன்று அகமதாபாத் மற்றும் ராய்ப்பூரில் கோயில்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் டெல்லி உள்ளூர் ஆலோசனைக் குழுவின் தலைவர் வெமி பிரசாந்தி, ஜே.இ.ஒ. வீரபிரம்மம், எஸ்.பி. ராகுல், முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், தலைமைப் பொறியாளர் நாகேஸ்வர ராவ், எஸ்.இக்கள் சத்தியநாராயணா, வெங்கடேஷ்வர்லு, வி.ஜி.ஒ.மனோகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post ₹30 கோடி செலவில் 62 ஏக்கரில் அமைந்துள்ளது ஜம்முவில் வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலுக்கு மகா சம்ப்ரோக்‌ஷணம் appeared first on Dinakaran.

Tags : Venkateswara Swami Temple ,Jammu ,Tirumalai ,Venkateswara ,Maha Sambrokshan ,
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...