×

சேர்க்காடு அரசு பள்ளியில் இடையில் நின்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி

திருவலம் : சேர்க்காடு அரசு பள்ளியில் இடையில் நின்ற மாணவி, மீண்டும் பள்ளியில் சேர்ந்து பிளஸ்2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.தமிழகத்தில் பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ, மாணவிகளை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்த்து அவர்களது வாழ்வை முன்னேற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த விண்ணம்பள்ளி ஊராட்சி தேவேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரசு. கணவனால் கைவிடப்பட்டவர், கூலி வேலை செய்து வருகிறார். இவரது இளைய மகள் கலைவாணி. கடந்த 2019-2020ம் கல்வியாண்டில் சேர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

அந்த கல்வியாண்டில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். எனவே, மாணவி கலைவாணி அந்த கல்வியாண்டில் 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 2020-2021ம் கல்வியாண்டிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். எனவே, 10ம் வகுப்பிலும் இந்த மாணவி தேர்ச்சி பெற்றார்.

தொடர்ந்து, 2021-2022ம் கல்வியாண்டில் கொரோனா நோய் பரவல் குறைந்ததையடுத்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது, 11ம் வகுப்பில் பயின்று வந்த மாணவி கலைவாணி குடும்ப சூழ்நிலை காரணமாக திடீரென பள்ளியில் இருந்து பாதியிலேயே நின்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் பேபி மற்றும் ஆசிரியர்கள் நேரில் சென்று, அவரது தாயாரிடம் மாணவி கலைவாணியின் படிப்பை தொடர்வதற்கு அறிவுறுத்தினர். அதன்பேரில், மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க தொடங்கிய மாணவி கலைவாணி பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

தொடர்ந்து, 2022-2023ம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவி கலைவாணி எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவி கலைவாணி 342 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதுகுறித்து மாணவி கலைவாணி கூறுகையில், ‘பள்ளி படிப்பை இடையில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்த என்னை தலைமையாசிரியர், ஆசிரியர்கள் தொடர்ந்து படிக்க அறிவுறுத்தினர். அதன்படி, மீண்டும் பள்ளியில் சேர்ந்து பாடங்களை நன்கு படித்து தேர்வு எழுதினேன். தற்போது, தேர்விலும் வெற்றி பெற்றுள்ளேன். ெதாடர்ந்து, கல்லூரியில் சேர்ந்து மருத்துவ டிப்ளமோ படிப்பை படிக்க வேண்டும் என்பது எனது முக்கிய குறிக்கோளாக உள்ளது’ என்றார்.

The post சேர்க்காடு அரசு பள்ளியில் இடையில் நின்ற மாணவி பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvalam ,Samgadhu Government School ,Samgkhadu Government School ,
× RELATED ஊராட்சி செயலாளர் வீட்டில் விஜிலென்ஸ்...