×

கீழடி 9ம் கட்ட அகழாய்வில் பானை ஓடுகள் கண்டெடுப்பு

திருப்புவனம் : கீழடியில் நடந்து வரும் 9ம் கட்ட அகழாய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதனால் அப்பகுதியில் மண்பாண்ட உற்பத்திக்கூடம் செயல்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை, கடந்த மாதம் 6ம் தேதி கொந்தகை வீரணனின் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக நான்கு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்தன. இதில் மூன்று குழிகளில் தரைத்தளம் கண்டெடுக்கப்பட்டதால், அதில் அகழாய்வு பணிகள்மேற்கொள்ளப்படாமல் நான்காவது குழியில் மட்டும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தன.

இந்த ஒரே குழியில் மட்டும் ஆயிரக்கணக்கான பானை ஓடுகள், சேதமடைந்த பானைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. குழியில் தோண்டப்படும் இடங்களில் எல்லாம் பானை ஓடுகளாக கிடைத்து வருகின்றன. ஓடுகளில் குறியீடுகள், படங்கள் எதுவும் இல்லை. மேலும் கரிமண் துகள்களும் கிடைத்துள்ளன. 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் தற்போது அகழாய்வு நடந்து வருகிறது. 7ம் கட்ட அகழாய்வில் இரண்டு உலைகலன்கள் கண்டெடுக்கப்பட்டன.

எனவே இந்த இடங்களில் மண்பாண்ட உற்பத்தி கூடங்கள், மண்பானைகள் இருப்பு வைக்கப்படும் கிட்டங்கி செயல்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. எனவே கரிமண் துகள்கள், பானை ஓடுகளை பகுப்பாய்விற்கு அனுப்ப தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன் பின்னரே பானை உற்பத்திக்கூடம் இருந்துள்ளதா என்ற விவரங்கள் தெரியவரும்.

The post கீழடி 9ம் கட்ட அகழாய்வில் பானை ஓடுகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Thirupuvanam ,Geezadi ,
× RELATED தாய் பாசத்திற்கு ஈடு இணை ஏது?...