×

மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆய்வு: கடைகள், வணிக நிறுவனங்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிப்பு

 

ஊட்டி, மே 10: நீலகிரி மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், ஸ்பூன், ஸ்ட்ரா, முலாம் பூசப்பட்ட காகித தட்டுககள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவ தாள், பிளாஸ்டிக் தோரணங்கள், கொடிகள் போன்ற உள்ளிட்ட 19 வகையான பொருட்கள் பயன்படுத்த தடை உள்ளது. இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தற்போது கோடை சீசன் களைகட்ட துவங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் ஏதேனும் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளின் சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்து கடைகள், வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் பல கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், பிளாஸ்டிக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்படி மொத்தம் ரூ.80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகளும் அதனை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

The post மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆய்வு: கடைகள், வணிக நிறுவனங்களுக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் கருஞ்சிறுத்தை: சுற்றுலா பயணிகள் பீதி