×

சி.ஏ.பயிற்சி மைய உரிமையாளரிடம் ஐ.பி.எல் டிக்கெட் விற்பதாக கூறி நூதன முறையில் ரூ.90,000 அபேஸ்: மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி டி.பி. கோயில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (32). இவர், ராயப்பேட்டை கவுடியா மடம் சாலையில் சி.ஏ.படிப்புக்கு பயிற்சி மையம் நடத்தி வருகிறார். கடந்த 6ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- மும்பை அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடந்தது. இந்த போட்டியை காண அருண்குமார் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்காக அருண்குமார் பல இடங்களில் ஐபிஎல் டிக்கெட் வாங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

இதற்கிடையே அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்து கொண்டிருந்த போது, அதில், 6ம் தேதி நடக்கும் சென்னை- மும்பை போட்டிக்கான டிக்கெட் புகைப்படத்தை பதிவு செய்து, வினோத் யாதவ் என்பவர் டிக்கெட் தேவைப்படுபவர்கள் எத்தனை டிக்கெட் தேவை என்று பதிவு செய்யலாம் என்று தெரிவித்திருந்தார். இதை கவனித்த அருண்குமார் உடனே இன்ஸ்டாகிராம் மூலம் வினோத் யாதவ் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த நபர், ஒரு டிக்கெட் ரூ.4,500 என்றும் கூறியுள்ளார். உடனே, அருண்குமார் தனக்கு 20 டிக்கெட் வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே வினோத் யாதவ், ‘‘20 டிக்கெட்டுக்கான பணம் ரூ.90 ஆயிரத்தை எனது வங்கி கணக்கில் அனுப்பினால், உடனே உங்களை தேடி டிக்கெட் வந்து சேரும்,’’ என்று உறுதி அளித்துள்ளார்.

அதன்படி அருண்குமார் 4 தவனையாக ரூ.90 ஆயிரத்தை தனது வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் வினோத் யாதவுக்கு அனுப்பியுள்ளார். பணம் அனுப்பிய உடன் வினோத் யாதவ் டிக்கெட் கொடுப்பது பற்றி எதுவும் கூறவில்லை. அதன்பிறகு அருண் குமார் இன்ஸ்டாகிராம் மூலம் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பதில் அளிக்க வில்லை. இதனால் அருண்குமார் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். உடனே, இதுகுறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அருண்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சி.ஏ.பயிற்சி மைய உரிமையாளரிடம் ஐ.பி.எல் டிக்கெட் விற்பதாக கூறி நூதன முறையில் ரூ.90,000 அபேஸ்: மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : CA ,IPL ,CHENNAI ,THIRUVALLIKENI ,D.P. Arun Kumar ,Koil Street ,Gaudiya Madam Road, Rayapetta ,Abes ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்றத்தில் சி.ஏ தேர்வு தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி