×

சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்பட 10 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை: இளைஞர்களுக்கு ஆயுதங்கள் பயன்படுத்துவது குறித்து தீவிரவாத பயிற்சி அளித்ததாக தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழக நிர்வாகிகள் 5 பேரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். முன்னதாக சென்னை, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட 6 இடங்களில் நடந்த சோதனையில் ஆயுதங்கள், டிஜிட்டல் மென்பொருள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து அதிகளவில் சட்டவிரோதமாக நிதி உதவி மற்றும் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தமிழகம் உள்பட சில மாநிலங்களில் இருந்து சில ஏஜென்ட்டுகள், தங்கள் அமைப்பு மூலம் ஆட்களை தேர்வு செய்து அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கேரளா, கர்நாடகா, தமிழகம், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் என 15 மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகங்கள், தேசிய மற்றும் மாநில நிர்வாகிகளின் வீடுகள், அவர்களின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை முடிவில் நாடு முழுவதும் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைமை அலுவலகம், நிர்வாகிகள் வீடு, மதுரை, திண்டுக்கல், கோவை, கடலூர் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 10 பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் 8 துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்பு நிர்வாகிகள் சிலர், மீண்டும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் இருந்து வருவதாகவும், தங்களது இயக்கத்தில் சேர்ந்துள்ள இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ரகசியமாக பயங்கர ஆயுதங்களை கையாள்வது குறித்து பயிற்சி அளித்து வருவதாகவும் என்ஐஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 10 பேர் இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அதன் துணை அமைப்பு நிர்வாகிகள் வீடுகள், பண்ணை வீடுகள் என 6 இடங்களில் ேநற்று என்ஐஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர். சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதி புதிய காலனியை சேர்ந்த அப்துல் ரசாக் (47) என்பவர் வீட்டிலும் சோதனை நடந்தது. இவர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் வட சென்னை மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் என்ஐஏ இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை அதிரடியாக சோதனை நடத்தி, அவரை கைது செய்தனர். அதேபோல், மதுரை நெல்பேட்ைட பகுதியை சேர்ந்த முகமது அப்பாஸ்(45) மற்றும் தெப்பக்குளம் பகுதியில் வசிக்கும் முகமது யூசுப்(35) ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அவர்களை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியை சேர்ந்த சாதிக் அலி(39). எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது வீட்டிலும் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். பழநி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகரை சேர்ந்தவர் கைசர்(45). நேற்று அதிகாலை 4.30 மணிக்கு என்ஐஏ அதிகாரிகள் இவரது வீட்டிற்கு வந்து அவரை கைது செய்தனர். 2016 சட்டமன்ற தேர்தலில் பழநி தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கைசர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்த சோதனை குறித்து என்ஐஏ விடுத்த அறிக்கையில், ‘‘இந்தியாவில் 2047ம் ஆண்டில், இஸ்லாமிய அரசு நிறுவுவதற்காக தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இதற்கான திட்டங்களை வகுத்து செயல்பட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் நடந்த சோதனையில் குற்ற செயலுக்கு பயப்படுத்தும் ஆயுதங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேர் கைது செய்யப்பட்டனர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை, மதுரை, திருச்சி, தேனி உள்பட 10 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : NIA ,Chennai ,Madurai ,Trichy ,Theni ,Popular Front of India Organization ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை