×

தேர்தலில் போட்டியிட முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் மாஜி விஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பழைய விசுவாசத்தால் இலை கட்சியின் மாவட்ட பதவிக்கு வேட்டு வைக்கும் மாஜி அமைச்சர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வடமாநில நதி பெயரில் முடியும் ஒரு மாவட்டத்தின் இலைக்கட்சியின் முக்கிய புள்ளியாக ‘முருகன்’ பெயர் கொண்டவர் இருக்கிறார். தற்போது மக்கள் பிரதிநிதி பதவியும் தன் வசம் வைத்துள்ளாராம். ஆனால், இலைக்கட்சி பிரிந்தபோது, கிப்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மீது இருந்த அதிதீவிரமான விசுவாசம் காரணமாக, மூன்று எழுத்து இனிஷியலை கொண்டவர் மீது தான் பாசம் அதிகம் இருந்ததாம். அதனால, கொஞ்ச நாட்கள் அந்த பக்கம் இருந்தாராம். இந்த சூழல்ல, தமிழகம் முழுவதும் குக்கர் கூடாராம் கலகலக்க ஆரம்பித்ததும் திடீரென காமெடி காட்சியில் வருவதுபோல, இருந்த இடத்தில் இருந்தே டக்கென, அதே கட்சியில் மாற்று அணியான சேலம் அணியில் தன்னை இணைத்து கொண்டாராம்.

மேலும், தன்னை சேலம்காரரின் தீவிர விசுவாசியாக காட்டிக் கொண்டார். அதே சமயம் அதே மாவட்டத்தில் இருந்த ‘பாஸ்’ என்ற பெயரை கொண்டவர் அமைச்சராக இருந்தவர். அவருக்கும் கடந்த தேர்தலில் இலைக்கட்சி ஆட்சியின்போது சீட் வழங்கவில்லையாம். இதற்கு முருகன் பெயர் கொண்டவரே காரணம் என்று இருதரப்புக்கும் ஏற்பட்ட முட்டல் மோதல் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறதாம். இதனால் மாஜி அமைச்சர் இலைக்கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை. இலை கட்சி தலைமை போராட்டம் உள்பட எந்த அறிவிப்பு வெளியிட்டாலும் தன் ஆதரவாளர்களுடன் தனித்தே சென்று கொடியுடன் நின்று போராடுவாராம். தற்போது தேனிக்காரர் – குக்கர்காரர் இடையில் திடீரென ஏற்பட்ட சந்திப்பால், முருகன் பெயர் கொண்டவர் மனசுல தற்போது புதுசா ஒரு எண்ணம் ஓடுதாம்.

அதாவது, அவருக்கு பழைய விசுவாசம் தலை தூக்கத் தொடங்கியுள்ளதாம். சேலம்காரர் வேண்டாம், நாம குக்கர்காரர் பக்கம் போயிடலாம். காரணம் தேனி, குக்கர்காரர் மற்றும் சின்ன மம்மி ஆகியோர் தேர்தல் யுக்தி வகுப்பதில் வல்லவர்கள். அவர்கள் பின்னால் சென்றால் நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்ற நினைப்பில் இருப்பதாக தொண்டர்கள் சொல்றாங்க. முருகன் பெயர் கொண்டவரின் திருவிளையாடலை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த, மாஜி அமைச்சர் ‘பாஸ்’ தரப்பினர் இந்த விஷயத்தை பற்றி சேலத்துக்காரரின் காதுக்கு கொண்டு போனாங்களாம். இதனால டென்ஷன் அடைந்த சேலம்காரர் முருகன் பெயரை கொண்ட இலை கட்சி பிரதிநிதியின் நடவடிக்கைகளை கண்காணித்து உண்மையான அறிக்கை தருமாறு தனது கட்சியின் உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம். இதனால மாஜி அமைச்சர் ரொம்ப குஷியாக இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தங்களை பைன் கட்ட சொன்ன கேமராவையே தூக்கி அடிச்சாங்களாமே காக்கிகள்…என்ன நடந்தது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல்ஸ் நகரில் முக்கிய சந்திப்பில், சாலை விதிகளை மீறி செல்பவர்களுக்கு அபராதத்தொகை விதிக்கும் தானியங்கி இயந்திரம் இருக்காம். இதன்மூலம் பைக், ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களது செல்போனுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் போகுதாம். இந்நிலையில் தான், ஹெல்மெட் அணியாமல் பைக், ஸ்கூட்டரில் வேகமாக சென்ற காக்கிகளுக்கு கூட நீங்கள் சாலை விதிகளை மீறியதாக கூறி அபராதம் தொகை கட்ட சொல்லி எஸ்எம்எஸ் போச்சாம். இப்படி, 50 காக்கிகள் தங்களுக்கு வந்த எஸ்எம்எஸ்சை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோனார்களாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காக்கிகள் அபராதம் செலுத்துவதற்கு பதில் தங்களை அசிங்கப்படுத்திய, நகரில் முக்கிய சந்திப்பில் இருக்கும் தானியங்கி கேமராவை இரவோடு இரவாக கழற்றி எடுத்துட்டு போயிட்டாங்களாம். இந்த தகவல் அதிகாரிகள் கவனத்துக்கு போச்சாம். இதுதொடர்பாக ரகசிய விசாரணை நடந்து வருகிறதாம். இந்த ரகசிய விசாரணைக்கு பயந்துசம்பந்தப்பட்ட காக்கிகள் கிலியில் உள்ளார்களாம்’’… என்றார் விக்கியானந்தா. ‘‘இலை தன் கைக்கு வந்தும், நிம்மதியை தொலைத்த மாஜி விஐபி பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆன மகிழ்ச்சி, சேலத்துக்காரருக்கு ஓராண்டு கூட நீடிக்கலையாம். சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுவில் சொத்துக்களை மறைச்சுட்டார்னு, அவர் தாக்கல் செய்த மனுவின் விவரங்களை வைச்சே ஒரு தட்டு தட்டிப்புட்டாராம் இன்னொரு தேனிக்காரர்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது போல கோர்ட்டும் ஆர்டர் போடலையாம். நல்லா தரோவா மனுவை படிச்சு, அதில் உள்ள விவரங்கள் உண்மையா இருப்பதை தெரிஞ்ச பிறகே விசாரணைக்கு உத்தரவு போட்டிருக்காம். இந்த மனுவை படிச்சுப் பார்த்த இலைக்கட்சியின் சட்ட நிபுணர்கள் கூட ஷாக்காயிட்டாங்களாம். அத்தனை விவரம் அதில் அடங்கியிருக்காம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துல வழக்கு பதிவு செஞ்ச போலீசார் விசாரணைய முடுக்கி விட்டிருக்காங்களாம். விசாரணையில தவறுகள் உறுதியாயிட்டா இலைக்கட்சிக்காரர் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படுமாம். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத இலைக்கட்சியின் சொந்தக்காரர், ரொம்பவே அப்செட்டா இருக்காராம். எத்தனையோ தடைகளை தாண்டியிருக்கேன். இதனையும் தாண்டுவேன்னு சொல்லி தன்னை தானே தேற்றிக் கொண்டு இருப்பதாக, சேலம்காரருக்கு நெருக்கமானவர்களே பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post தேர்தலில் போட்டியிட முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் மாஜி விஐபி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Maji ,Yananda ,Yaru ,minister ,Leaf Party ,Old Faith ,Peter Uncle ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...