×

‘ஒரே நாடு; ஒரே கார்டு’ திட்டம் மூலம் ரேஷன் கார்டில் மேலும் கட்டுப்பாடு வருது! மாநிலங்களுடன் ஒன்றிய அரசு ஆலோசனை

புதுடெல்லி: ‘ஒரே நாடு; ஒரே கார்டு’ திட்டம் மூலம் ரேஷன் கார்டில் மேலும் கட்டுப்பாடு கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் தகவல்களின்படி, ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ், இதுவரை 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட நாட்டின் மக்கள் தொகையில் 86 சதவீத மக்கள், இத்திட்டத்தில் இணைக்கப்பட்டனர். சுமார் 1.5 கோடி மக்கள் தங்களது சொந்த இடத்திற்கு மாற்றாக எந்தவொரு மாவட்டம், மாநிலங்களிலும் ரேஷன் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி ரேஷனில் உணவுப் பொருட்களை பெறுகின்றனர். அவர்களில் பலர், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளனர்.அவர்களுக்கு மேலும் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்காக, பொது விநியோக திட்ட முறையில் மாற்றங்களை செய்ய ஒன்றிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் முற்றிலும் வெளிப்படைதன்மையுடன் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே கூறுகையில், ‘ரேஷன் கார்டின் தரத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசுகளுடன் கடந்த ஆறு மாதமாக ஆலோசனை நடத்தி உள்ளோம். மாநிலங்கள் அளித்த பரிந்துரைகளுடன் சேர்த்து புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவை விரைவில் இறுதி செய்யப்படும். புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்போது, தகுதியான நபர்கள் மட்டுமே ரேஷன் கடை மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் மற்றும் நிதி உதவிகளை பெறமுடியும். தகுதியற்ற நபர்கள் பயனடைய முடியாது. போலிகளை முழுமையாக ஒழிக்க முடியும்’ என்றார்….

The post ‘ஒரே நாடு; ஒரே கார்டு’ திட்டம் மூலம் ரேஷன் கார்டில் மேலும் கட்டுப்பாடு வருது! மாநிலங்களுடன் ஒன்றிய அரசு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Union Government ,New Delhi ,Ore Nadu ,Dinakaran ,
× RELATED பெண் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் டிஐஜி டிஸ்மிஸ்