×

தரமான வருமானம் தர்பூசணியிலே !

ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் லாபம்

கடலூர் மாவட்டத்தில் விவசாயத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறப்பை கொண்டிருக்கின்றன. பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகள் மா, பலா, முந்திரி விவசாயத்திற்கு பேர்போனவை. பண்ருட்டி பலா என்றால் உலகளவில் பிரசித்தம். அதேபோல சேத்தியாத்தோப்பு, சிதம்பரம் பகுதிகள் நெல், கரும்பு விவசாயம் செழித்திருக்கும் பகுதிகள். கடலூர் கேப்பர் மலைப் பகுதியில் வாழை விவசாயம் கொடிகட்டி பறக்கிறது. இதில் பரங்கிப்பேட்டை, புவனகிரியை ஒட்டிய பகுதிகளில் ஒரு கூடுதல் ஸ்பெஷல் இருக்கிறது. மணற்பாங்கான இந்த பகுதிகளில் மல்லிகை, முல்லை போன்ற பூக்களும், வாழையும் செழிப்பாக விவசாயம் செய்யப்படுகின்றன. இதில் பரங்கிப்பேட்டையை ஒட்டிய புதுச்சத்திரம், கொத்தட்டை, சின்ன குமட்டி, பெரிய குமட்டி போன்ற கிராமங்களில் ஜனவரி மாதம் பிறந்துவிட்டால் தர்பூசணி சாகுபடி களைகட்ட தொடங்கிவிடுகிறது. இந்த கிராமங்கள் தர்பூசணி மண்டலமாகவே மாறிவிட்டன.

மார்ச் மாதத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில் பயணித்தால் புதுச்சத்திரத்தில் இருந்து புவனகிரி வரை சாலையோரம் தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இப்போதுகூட இந்த சாலையில் ஆங்காங்கு தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள் தர்பூசணி தோட்டங்களாக செழித்திருக்கின்றன.புதுச்சத்திரம் அருகில் உள்ள வடஹரிராஜபுரம் என்ற கிராமத்தில் ரயில்வே தண்டவாளம் அருகில் பசுமை கட்டி நிற்கும் ஒரு வயலும் அப்படித்தான் இருக்கிறது. நீண்டு ஓடும் கொடிகளுக்கு இடையே பச்சையும், வெள்ளையும் கலந்த நிறத்தில் மாலை வெயிலில் மின்னும் தர்பூசணி பழங்களை பார்வையிட்டவாறே பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயி நாராயணன் என்பவரை சந்தித்தோம்.

நாங்க இங்க பல தலமுறையா பாரம்பரியமா விவசாயம் பண்ணிகிட்டு வரோம். நெல், மல்லாட்டை (மணிலா), எள், உளுந்து, பாவக்காய், பீர்க்கங்காய், புலங்காய், கத்திரின்னு பல பயிர்களை விளைவிக்கிறோம். எனக்கு இருக்குற 5 சென்ட் நிலத்தில இந்த பயிர்களை மாத்தி மாத்தி விளைவிப்போம். நான் மட்டுமில்ல, இந்த பகுதியில பல விவசாயிங்க இந்த பயிர்களைத்தான் விளைவிப்பாங்க. இப்படி இருக்கும்போது 2006-2007 காலகட்டத்தில இந்த பகுதிகள்ல தர்பூசணியை அறிமுகப்படுத்தினாங்க. இதில் நல்ல லாபம் கிடைக்கும், செய்யுங்கன்னு விவசாயத்துறை அதிகாரிகள் சொன்னதால செஞ்சோம். அவுங்க சொன்ன மாதிரியே நல்ல லாபம் கிடைச்சுது.

அந்த சமயத்தில குடத்துல தண்ணி பிடிச்சுதான் ஊத்துவோம். இந்த பகுதிகள்ல இருக்குறது மணல்பாங்கான நிலம்ங்குறதால தண்ணி ஊத்துறது சிரமமா இருந்தது. இதுக்கு நல்லா தண்ணி ஊத்தணும். எவ்ளோவுக்கு தண்ணி ஊத்துறோமோ, அவ்ளோவுக்கு பழங்கள் திரட்சியா வரும். குடத்துல பிடிச்சுட்டு வந்து ஊத்துறது ரொம்ப கஷ்டமா இருக்கும். இதனால் சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சோம். இப்போது கஷ்டமில்ல. தண்ணியும் மிச்ச
மாகுது. வேலையும் மிச்சமாகுது.பரங்கிப்பேட்டை சுற்றுவட்டாரத்திற்கு தர்பூசணி அறிமுகமான கதையைக் கூறிய நாராயணன், தனது சாகுபடி அனுபவம் குறித்து தொடர்கிறார்.

தர்பூசணி சாகுபடியை பொறுத்தவரை ஜனவரி மாசத்துல நாலு, அஞ்சு முறை நல்லா நிலத்தை உழவு ஓட்டுவோம். அதுக்கப்புறம் 4*4 இடைவெளில வரிசை அமைச்சு, அதில 2*2 இடைவெளில விதைகளை ஊன்றுவோம். விதை ஊன்றும்போது அரை அடி ஆழத்திற்கு குழியெடுத்து விதை ஊன்றி, அரை கிலோ தொழுவுரம் இடுவோம். உடனே உயிர்த்தண்ணி விடுவோம். அதன்பிறகு தினமும் 1 மணி நேரம் பாசனம் பண்ணுவோம். சொட்டுநீர்ங்குறதால விதை இருக்கிற குழிகளுக்கு மட்டும்தான் தண்ணீர் பாயும். இதனால் தண்ணி வீணாகாது.

விதை ஊன்றுதுனல இருந்து 5, 6 நாள்ல செடி முளைச்சு வெளில வரும். அதில 15 நாள்ல முதல் களை எடுப்போம். அந்த சமயத்தில சொட்டுநீர்ப் பாசனத்துல உரம் கலந்து இடுவோம். என்ன உரம் போடணும், எவ்வளவு போடணும்ங்குறத விவசாயத்துறை அதிகாரிகள்கிட்ட கேட்டுக்குவோம். செடிகள்ல பூச்சிநோய் வந்தா அதிகாரிகள்கிட்ட கேட்டு உரிய மருந்துகளை வாங்கி தெளிப்போம். செடிகளை நல்லா பராமரிச்சுகிட்டு வருகிற சமயத்துல 30 நாள்ல பிஞ்சு வைக்க ஆரம்பிக்கும். பிஞ்சு வைக்கிற சமயங்கள்ல பாசனம் ரொம்ப முக்கியம்.

60, 65 நாட்கள்ல அறுவடை பண்ண ஆரம்பிக்கலாம். முதல் அறுவடை முடிஞ்சி 1 வாரத்தில 2வது அறுவடை பண்ணலாம். பாண்டிச்சேரி, கடலூர், திட்டக்குடி, மயிலாடுதுறை போன்ற ஊர்கள்ல இருந்து வியாபாரிங்க எங்க வயலுக்கே வந்து தர்பூசணி பழங்களை வாங்கி லாரி வச்சி ஏத்திக்கிட்டு போறாங்க. உள்ளூர்ல இருக்கிற விவசாயிகளும் வாங்கிட்டு போய் சாலையோரத்தில குவிச்சு வச்சு விக்குறாங்க. இதனால் இதை விற்பனை பண்றதுல பிரச்னை இல்லை. தர்பூசணியில ஏக்கருக்கு எப்படியும் 15 டன் மகசூல் எடுக்கலாம்.ஒரு கிலோ தர்பூசணி 5 ரூபாயில இருந்து 12 ரூபாய் வரை விலை போகும். சராசரியா 7 ரூபாய் கிடைக்கும். 15 டன் மூலமாக 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. இதில 30 ஆயிரம் செலவு போக 75 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது.

எலித்தொல்லைக்கு நொச்சி
10 லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ மீன் கழிவுகளைப் போட்டு, நான்கு நாள்கள் ஊறவைத்து, வேலி ஓரத்தில் தெளித்து வந்தால்… மயில், ஆடு, மாடுகள் போன்றவை பயிருக்கு அருகில் வருவதில்லை. நொச்சி இலைகளைப் பறித்து வயல் வெளிகளைச் சுற்றிலும் நட்டு வைத்து எலி வளைகளில் போட்டு வைத்தால் எலித்தொல்லை இருக்காது.

‘பொத்’ எனும் ஓசை :
பழுத்தபழம்

15-ம் நாளிலிருந்து வாரம் ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 15-ம் நாளுக்குமேல் நிலத்தில் கொடி படரத் தொடங்கும். தேவைப்பட்டால், கொடிகள்மீது பஞ்சகவ்யா கரைசலைத் தெளிக்கலாம். 25-ம் நாளுக்குமேல் பூ எடுத்து 30-ம் நாளுக்குமேல் பிஞ்சு பிடிக்கும். 40-ம் நாள் பாசன நீருடன் பஞ்சகவ்யாவைக் கலந்து விட வேண்டும். காய்கள் பருமனாகவும் எடை கூடுதலாகவும் இருக்க வளர்ச்சியூக்கியாக 50-ம் நாளில் நவதானியக் கரைசலைத் தெளிக்க வேண்டும். 60-ம் நாளுக்குமேல், தேவையைப் பொறுத்து அறுவடை செய்யலாம். பழங்களைத் தட்டிப் பார்த்தால், ‘பொத்’ எனும் மந்தமான ஓசை கேட்டால், முதிர்ச்சி அடைந்துவிட்டது என்று அர்த்தம். சந்தைக்கு அனுப்பலாம்.

The post தரமான வருமானம் தர்பூசணியிலே ! appeared first on Dinakaran.

Tags : Cuddalore district ,Panrutti ,Vrutasalam ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!