×

கோயிலை அறநிலையத்துறையில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து மரக்காணத்தில் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம்

*நீதிமன்றத்தை நாடி தீர்வு காண அதிகாரிகள் உத்தரவு

மரக்காணம் : மரக்காணத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தை நாடி தீர்வு கண்டு கொள்ளுமாறு அதிகாரிகள் மற்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி தர்மபுரி வீதியில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு மரக்காணம் பகுதியில் உள்ள பொதுமக்கள் நிதி வசூல் செய்து 21 நாட்களுக்கு திருவிழா நடத்துவது வழக்கம். இதுபோல் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி பொதுமக்கள் பாரம்பரியம் மாறாமல் திருவிழா நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது, இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கருத்தை கேட்காமல் பொதுமக்களுக்கு சொந்தமான இந்த கோயிலை இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பார்த்த இப்பகுதி பொதுமக்கள் கோயிலை இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒப்படைக்க மாட்டோம். இந்த கோயிலுக்கு அரசு சார்பில் எந்த வருவாயும் இல்லை. இங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தாரின் ஒத்துழைப்பை வைத்து தான் நாங்கள் அமைதியாக ஆண்டுதோறும் திருவிழா நடத்தி வருகிறோம் என்று துறை அதிகாரிகளிடம் கூறினர்.

ஆனால் அதிகாரிகள் இந்த கோயிலை இந்து சமய அறநிலையத்துறையில் சேர்க்க வேண்டும் என்று ஒரு சிலர் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த புகார் மனுவின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இப்பகுதி பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து மரக்காணம் பேருந்து நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மேலும், மரக்காணம் பேரூராட்சியில் உள்ள அனைத்து கடைகளையும் வணிகர்கள் அடைத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்தாண்டு திருவிழா நடத்திக்கொள்வதில் வருவாய்த்துறையினரோ, காவல்துறையினரோ தடை செய்ய மாட்டோம்.

ஆனால் இந்த திருவிழா முடிந்த பிறகு ஊர் பொதுமக்களும், சம்பந்தப்பட்ட தனிநபரும் நீதிமன்றத்தை நாட வேண்டும். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படியே திருவிழா நடத்துவதற்கும், கோயிலை பராமரிப்பதற்கும் அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்போம் என்று கூறினர். இதனை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து இந்தாண்டு திருவிழாவை எப்படி நடத்துவது என பொதுமக்கள் முடிவு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் மரக்காணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post கோயிலை அறநிலையத்துறையில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து மரக்காணத்தில் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Marakana ,Marakanam ,Dinakaran ,
× RELATED காதலனுடன் பள்ளி மாணவி மாயம் தாய் சடலத்துடன் உறவினர்கள் மறியல்