×

குண்டத்து காளியாதேவி

ஊமப்பாளையம் கோயம்புத்தூர் மாவட்டம்

தாய் தெய்வ வழிபாட்டின் மிக ஆதியாகிய வழிபாடு காளி வழிபாடாகும். காளி வழிபாடு ஒரு பயங்கரமான வழிபாடு என ஒரு சிலர் ஏற்றுக் கொண்டாலும், கருணையே வடிவானவளாக அடியார்களுக்கு துன்பம் வரும்போது, அவர்களைக் காப்பதற்காக இவள் பயங்கரமானவளாக காட்சி தருகின்றாள். காளி என்றால் காலத்தை நிர்ணயிப்பவள் என்று பொருள்படுகின்றது.

ஆதலால், காலமாக சக்தியாக அன்னை காட்சி தருகின்றாள். அவளை முழு மனதோடு விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று கூறியுள்ளனர் ஆன்றோர்கள். அன்னை இதுபோல் காட்சி தருகின்ற எண்ணற்ற தலங்களுள் ஊமப்பாளையம் தலமும் ஒன்று. நீலமலை சாரலில் ஓடிவரும் புண்ணிய நதியாம் பவானி ஆற்றின் வடகரையில் உள்ளது ஊமப்பாளையம் என்கின்ற அழகிய கிராமம்.

இங்கு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பக்தர் ஒருவரின் கனவில் தெய்வாம்சம் நிறைந்த பெண் வடிவில் தோன்றி ‘‘நான் இரும்பறைப் பகுதியில் இருந்து மேற்கு திசை நோக்கி வந்த காளியாதேவி. உங்கள் ஊரில் ஆற்றின் வடகரையையொட்டி ஒரு சிறு மரத்தடியில் வந்து தங்கியுள்ளேன். எனக்கு கோயில் கட்டி, பின்னர் குண்டம் அமைத்து வழிபடுங்கள் உங்கள் எதிர்காலம் சிறக்க வழி பிறக்கும் என கூறி மறைந்தாராம்.

அதிகாலையில் எழுந்து அந்த பக்தர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் இத்தகவலை சொல்லி, தேவி கனவில் சொல்லிய இடத்தை, கரையையொட்டியுள்ள பகுதிகளில் தேடியுள்ளனர். அப்போது ஒரு சிறுமரத்தடியில் எலுமிச்சைக்கனியை வைத்து யாரோ அப்போதுதான் வழிபட்டது போல் இருந்துள்ளது. அந்த தேவியே அவள் வந்து அமர்ந்த இடத்தை அடையாளம் காட்டிச் சென்றுள்ளதாக எண்ணி ஒரு சிறு கல்லை நட்டு, பச்சை பந்தல் அமைத்து ஊர் மக்கள் வழிபட்டுவிட்டு அம்பிகைக்கு ஆலயம் எழுப்ப முடிவு செய்தனர்.

பின் ஒருசில ஆண்டுகளில் தேவிக்கு ஆலயம் எழுப்பி சிறிய அளவில் சிலை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர் இப்பகுதி மக்கள். இதன் பின்னர் இத்தலம் வந்த பக்தை ஒருவருக்கு அருள் வந்து தனக்கு குண்டம் அமைத்து வழிபட சொன்னதை மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் பங்குனி மாதம் குண்டம் அமைத்து சிறப்பாக குண்டம் திருவிழா நடத்த ஆரம்பித்துள்ளனர்.

குண்டம் அமைத்து வழிபட ஆரம்பித்ததில் இருந்து இந்த அம்பிகைக்கு `குண்டத்து காளியாதேவி’ என்ற திருநாமத்தைச் சூட்டி வழிபட ஆரம்பித்துள்ளனர். வந்து வேண்டிடும் பக்தர்களின் குறைகள் தீர்ந்து நிறைவான வாழ்வு கிடைக்க ஆலயமும் வளர ஆரம்பித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஆலயத்தைப் புனரமைத்து இந்த அம்பிகைக்கு பெரிய சிலை வடித்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.

வடக்கு நோக்கிய ஆலயத்தில் நுழைந்ததும் சூலாயுதம் உள்ளது. அதனையடுத்து குண்டத்தைக் கடந்ததும் வேல், அம்மனின் ஊஞ்சல் மற்றும் ஆலயமணி உள்ளது. இதனையடுத்து பலிபீடம், சிம்ம வாகனம் உள்ளது. குண்டத்தின் மேற்குப் பகுதியில் ஆரம்ப காலத்தில் வழிபட்ட ஆதி மூலவர் அம்மன், அம்மனின் இருபுறம் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் தரிசனம் கிடைக்கின்றது.

அர்த்த மண்டபத்தில் துவார சக்திகள் கம்பீரமாக காவல்புரிகின்றனர். கருவறையில் குண்டத்துக் காளியாதேவி என்ற திருநாமம் கொண்டு அம்பிகை வேண்டிடுவோருக்கு குறையில்லா வாழ்வருளும் சக்தியாக அருள்பாலிக்கின்றாள். அம்மனை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் வாரந்தோறும் வருகின்ற செவ்வாய்க்கிழமையில் குண்டத்து காளிதேவியை ராகு கால நேரத்தில் நெய் அல்லது விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் உங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற எத்தகைய பிரச்னைகளும் நீங்கி சுலபத்தில் நிம்மதி பெறலாம்.

இந்த தேவியை வழிபட்டால் பில்லி, சூனியம் உள்ளிட்ட தீயசக்திகளிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. கோஷ்டத்தில் சாமுண்டி, மகேஸ்வரி, வைஷ்ணவி தரிசனம் தருகின்றனர். வெளிச்சுற்றில் கன்னிமார் அருள்பாலிக்கின்றனர். திருக்கோயிலின் எதிர்புறம் சிவபெருமான், முனீஸ்வரர், நாகதேவி அம்மன், அதர்வணக் காளி ஆகியோர் சுதை வடிவில் அருள்பாலிக்கின்றனர். கருப்பராய சுவாமி மற்றும் நவ நாயகர்கள் சிலாரூபத்தில் தரிசனம் தருகின்றனர். தினந்தோறும் மூன்று கால பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது.

அமாவாசை, பௌர்ணமி, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஆடி மாதம் ஐந்து வெள்ளிக்கிழமையும் மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. ஆடி 18-ல் ஊரின் எல்லையில் பவானி ஆற்றின் கரையோரத்தில் காலை 10 மணிக்கு மேல் ராகிகூழ் காய்ச்சிய பின்னர் மேள தாளம் முழங்க, அம்மனுக்கு அலங்காரம் செய்து சப்பரத்தில் அம்மன் பவனி வர பெண்கள் கஞ்சி கலயம் எடுத்து வந்து குண்டத்து காளியாதேவியை வழிபடுகின்றனர்.

பின்னர் அம்மனுக்கு படைத்த ராகிகூழ் மற்றும் பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்குகின்றனர். இந்த ராகிகூழை பிரசாதமாக உண்பவர்களுக்கு தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. பங்குனி மாதம் வளர்பிறையில் அம்மனுக்கு பொரிச்சாட்டுதலுடன் குண்டம் திருவிழா துவங்குகிறது. இதனையடுத்தடுத்த நாட்களில் அம்மன் அழைப்பு, ஊமப்பாளையம் விநாயகர் கோயிலிலிருந்து சக்தி கரகங்களும், சக்தி அக்னி சட்டியும் அழைத்து வரப்படுகிறது. இரவு அம்மன் அக்னி பந்தம் ஏந்தி ஆலயத்தில் ஆடும் நிகழ்வு நடைபெறுகிறது.

பின்னர் குண்டம் திறந்து பூ வளர்த்தல் நடைபெறுகிறது. பின் ஓடந்துறை பவானி அம்மன் கோயிலில் இருந்து சக்திகள், அக்னி சட்டியும், பூகரகம் எடுத்து வருதல் மற்றும் தேர் அலகு குத்தி அழைத்து வரப்படுகிறது. மறுநாள் அதிகாலையில் பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பு நடைபெறுகிறது. பின் காலை ஆறு மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர்.

பக்தர்கள் குண்டம் இறங்கிய பின் அம்மனுக்கும், முனீஸ்வரருக்கும் அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் மஞ்சள் நீராடல், பொங்கல் மாவிளக்கு எடுத்து வந்து வழிபாடு நடைபெறுகிறது. மறு பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது.

இத்திருத்தலம் செல்ல வழி:

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் – பாலப்பட்டி செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் ஊமப்பாளையம் உள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து பஸ், ஆட்டோ, கால் டாக்ஸி வசதி உள்ளது.

தரிசன நேரம்:
காலை 6 – 8, மதியம் 12 – 1, மாலை 5 – 7.

தொகுப்பு: சென்னிவீரம்பாளையம் சு.சரவணகுமார்

The post குண்டத்து காளியாதேவி appeared first on Dinakaran.

Tags : Kalliyadevi ,Umappalayam Coimpatur District ,Khaliyadevi ,
× RELATED திருவாலம் பொழில், ஆத்மநாதேஸ்வரர்