×

அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் டிடிவி.தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு: அமமுகவில் இணைய திட்டமா?

சென்னை: அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திடீரென சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். இதன்மூலம் அமமுக கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அதிமுகவை வழிநடத்தி வந்தனர். இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி கட்சி முழுவதையும் எடப்பாடி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். அதிமுகவின் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடியின் ஆதரவாளர்களாக மாறினர்.

இதையடுத்து, பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை அறிவிப்பை கொண்டு வருவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பொதுக்குழு கூட்டம் நடத்தி பொதுச்செயலாளராக பதவியேற்றார் எடப்பாடி. இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டனர். நீதிமன்ற தீர்ப்பும் எடப்பாடிக்கு சாதகமாகவே வந்தது.
பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்வுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு திடீரென்று சென்னை, அடையாறில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றார். ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா உள்ளிட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி உறுதியாக மறுத்து வருகிறார். இதுபற்றி டெல்லியில் அமித்ஷாவிடம் அவர் தெளிவுபடுத்தி விட்டார். எடப்பாடியின் கோரிக்கையை டெல்லி பாஜவும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன்மூலம், இனி ஓபிஎஸ் மற்றும் அவரது தீவிர ஆதரவாளர்கள் அதிமுகவில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனக்கென்று ஒரு கட்சி இருந்தால் மட்டுமே இனி ஓபிஎஸ் தேர்தலை சந்திக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. தனிக்கட்சி ஆரம்பிக்கவும் அவர் தயங்கி வருகிறார். அதனால், டி.டி.வி.தினகரன் ஆரம்பித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஆலோசனை நடத்தவே டி.டி.வி.யை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில், அமமுக கட்சியில் தன்னை இணைத்துக் ெகாள்வது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் தனித்தனியாக செயல்பட்டனர். அதே லட்சியத்தை அடைய இருவரும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். அதாவது இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் கட்சி எப்படி செயல்படுகிறார்களோ அதேபோன்று செயல்படுவோம். எங்களுக்கு சுயநலம் எதுவும் கிடையாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களிடம் இயக்கம் இருக்க வேண்டும். அதை கபளீகரம் செய்து கொண்டு இருக்கிறவர்களிடம் இருந்தும், பண பலத்தை வைத்துக் கொண்டு ஆணவம், அகங்காரத்துடன் செயல்படுபவர்களிடம் இருந்து மீட்டு எடுக்கும் முயற்சியில் இணைந்துள்ளோம். எங்களுடைய கட்சி தொண்டர்கள் கூட எப்போது ஓபிசை சந்திக்க போகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அந்த கருத்துகளின் அடிப்படையில் தான் சந்தித்துள்ளோம். சுயநலத்துடன் நாங்கள் இணையவில்லை.

சசிகலாவை சந்திப்பதற்கு தகவல் கூறினோம். அவர் வெளியூர் சென்றுள்ளதால் வந்தவுடன் உறுதியாக சந்திப்பதாக கூறியுள்ளார். அடுத்த மாநாடு இரண்டு கட்சிகள் இணைந்து நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. அனைத்து அடிப்படை தொண்டர்களும் இணைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இயக்கத்தை நடத்த வேண்டும் என்று தான் கூறினார்கள். ஒரு சிலர் தவிர மற்றவர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது அவருடைய சுயநலம், எங்களுடைய நோக்கம் அனைத்து தொண்டர்களையும் இணைத்து சட்ட திட்டத்திற்கு கட்டுப்பட்டு இயக்கத்தை நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் சந்தித்துள்ளோம். வழக்கு இன்னும் முடியவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலையை ெகாடுத்தும் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

* ஓபிஎஸ்சின் கையை பிடித்து இருட்டில்கூட போக முடியும்
ஓபிஎஸ் சந்திப்புக்கு பிறகு தினகரன் கூறும்போது, ‘‘பன்னீர்செல்வம் என்னுடைய பழைய நண்பர். என்னை நன்றாக அறிந்தவர், அவரை நன்றாக தெரியும். அவரை நம்பி இருட்டில் கூட கையை பிடித்துக் கொண்டு போக முடியும். நேரில் சந்திக்க வில்லையே தவிர அடிக்கடி தொலைபேசியில் ஓபிஎஸ்சுடன் பேசிக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் எடப்பாடி பழனிசாமியுடன் போக முடியுமா, பாஜ, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அல்லது தனியாக போட்டியிடுவது என மூன்று வாய்ப்புகள் உள்ளது. எடப்பாடி பழனிசாமி துரோகி. எங்களிடம் பணமூட்டைகள் இல்லை, பணமூட்டைகள் உள்ளவர்களிடம் தேவை கருதி சிலர் சுயநலத்திற்காக செல்கின்றனர். எங்களால் பணம் கொடுத்து அவர்களை வாங்க முடியாது. கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்துவது தொடர்பாக இடங்களை தேர்வு செய்வதற்காக தலைமை கழக நிர்வாகிகள் இன்று செல்கின்றனர்’’ என்றார்.

The post அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் டிடிவி.தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு: அமமுகவில் இணைய திட்டமா? appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,TTV.Thinakaran ,AIADMK ,CHENNAI ,DTV Dinakaran ,Adyar, Chennai ,AAMUK ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக, இரட்டை...