சென்னை: திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழக மாணவர் மணிமாறன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சட்ட படிப்பு முடித்த பின்னர் வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு கட்டணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவு மாணவர்களிடம் 11,100 ரூபாயும், இதர பிரிவு மாணவர்களிடம் இருந்து 14,100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பட்டதாரிகளால் இந்த தொகையை செலுத்துவது சிரமம். அரசு சட்ட கல்லூரிகளில் ஓராண்டுக்கான படிப்பு கட்டணமே 500 ரூபாயை தாண்டாத நிலையில் இவ்வளவு அதிகமாக பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சட்டப்படி பதிவு கட்டணமாக 750 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். படிப்பு முடித்த பின்னர் பதிவு செய்வதற்கு காலதாமதமானால் அதற்கென்று கூடுதலாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், அகில இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 2வது வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
The post வழக்கறிஞராக பதிவு செய்வதற்கான கட்டண நிர்ணயத்தை எதிர்த்து வழக்கு: தமிழ்நாடு பார்கவுன்சில் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

