×

கோவிலம்பாக்கத்தில் காவேரி மருத்துவமனை திறப்பு தென்சென்னையில் வாழும் மக்களுக்கு சேவையை இலகுவாக தொடர முடியும்: காவேரி மருத்துவமனை குழும தலைவர் சந்திரகுமார் தகவல்

சென்னை: கோவிலம்பாக்கத்தில் காவேரி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளதால் தென்சென்னையில் வாழும் மக்களுக்கு சேவையை இலகுவாக தொடர முடியும் என காவேரி மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். சென்னை கோவிலம்பாக்கம் துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் காவேரி மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி., எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அரவிந்த் ரமேஷ் மற்றும் காவேரி மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சந்திரகுமார், மேலாண்மை இயக்குனர் டாக்டர் மணிவண்ணன், செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர், காவேரி மருத்துவமனை குழுமத்தின் தலைவர் டாக்டர் சந்திரகுமார் கூறியதாவது: 250 படுக்கை வசதி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அனைத்து வயதினருக்கும் தேவையான நவீன மருத்துவ வசதிகளை கொண்ட ஒரு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டிருக்கிறது. மூளை -நரம்பியல், தண்டுவட பிரிவு, இதய சிகிச்சை பிரிவு, குடல் இரைப்பை பிரிவு, சிறுநீரக பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு, விபத்து மற்றும் அவசரநிலை சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகளில் உயர்தர சிறப்பு மையங்களை 24X7 மணிநேரம் வழங்க உள்ளது. 75 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, 20 படுக்கை வசதிகள் கொண்ட பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு, நவீன கேத் லேப் மற்றும் அதிநவீன ஆபரேஷன் தியேட்டர்களை கொண்டுள்ளது.

நோய் அறிதலுக்கான துல்லியமான திறன்களைக் கொண்ட 3 டெஸ்லா எம்ஆர்ஐ மற்றும் 128-ஸ்லைஸ் சிடி உள்பட நவீன இமேஜிங் சேவைகளுடன் 24 மணி நேரமும் மருத்துவமனை செயல்படும். தென்னிந்தியாவில் மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் காவேரி மருத்துவமனை, அனைத்து தரப்பினருக்கும் நம்பகமான மருத்துவ சேவையை தொடர்ந்து வழங்குவதில் எப்போதும் கடமைப்பட்டு உள்ளது. இந்த புதிய மருத்துவமனையை தொடங்குவதன் மூலம் தென்சென்னையில் வாழும் மக்களுக்கு சேவையை இலகுவாக தொடர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மணிவண்ணன் கூறுகையில், ‘‘எங்களின் 20 ஆண்டுகளுக்கு மேலான மருத்துவ சேவையில் ஒவ்வொருவருக்கும் கனிவான கவனிப்பு, சிறந்த பாதுகாப்பு மற்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்குவதில் உறுதி கொண்டுள்ளோம். மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள், நவீன மருத்துவ கருவிகள் மற்றும் உயர்திறன் மிக்க சிறப்பு மருத்துவர்களுடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனை, சென்னை மாநகரில் அனைத்து தரப்பினருக்கும் முதன்மை மருத்துவமனையாக திகழும்’’ என்றார்.

The post கோவிலம்பாக்கத்தில் காவேரி மருத்துவமனை திறப்பு தென்சென்னையில் வாழும் மக்களுக்கு சேவையை இலகுவாக தொடர முடியும்: காவேரி மருத்துவமனை குழும தலைவர் சந்திரகுமார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kaveri Hospital ,Kovilambakkam ,South Chennai ,Kaveri Hospital Group ,Chairman Chandrakumar ,Chennai ,Dinakaran ,
× RELATED வங்கதேச பெண்ணின் முழங்காலில் கட்டி அகற்றம்: காவேரி மருத்துவமனை அசத்தல்