×

மல்லிகைக்கு கைகொடுக்கும் தங்கச்சிமடம் பதியங்கள்

‘‘1000 செடி இருந்தா போதும் 1 லட்சம் உறுதியான வருமானம்’’

தமிழகத்தின் வேளாண் உற்பத்தியில் தன்னளவிலான மகசூல் பங்களிப்பை தந்து வருகின்றது ராமநாதபுரம் மாவட்டம். மல்லிகை என்றாலே மதுரை மல்லிகைக்கு எனத் தனி மவுசு உண்டு. அத்தகைய பெயர்பெற்ற மல்லிகைப் பூக்கள் மதுரை மண்ணின் பெயர் சொல்ல ஊற்றாக இருந்து மல்லிகைப் பதியங்கள்தான்.அப்படி மதுரைக்கு மல்லிகையை செய்து தருவது ராமேஸ்வரம் தீவில் உள்ள தங்கச்சிமடம் என்ற ஊர்தான். பெண்களின் கூந்தல்களில் மணம் வீசிவரும் மல்லிகைப் பூக்களை நம்பி விளைவித்து வரும் உற்பத்தியாளர்கள் ஏராளம் உள்ளனர். கொரோனா தடையுத்தரவினால் முடங்கிப் போய் இருந்தவர்கள் உற்சாகமாக பதிகம் போட்டு உற்பத்தி செய்து வருகின்றார்கள். பொதுவாக தமிழக விவசாயம் என்பது, பலதரப்பட்ட நெல் வகைகளைப் பயிரிடுவது முதல் பயிர்கள், தானியங்கள், பருத்தி உற்பத்தி, மாற்றுப்பயிர்வகைகளான மக்காச்சோளம் போன்றவற்றை விவசாயம் செய்துவருகின்றது. அதே போல பருத்தி, மிளகாய், வெள்ளரி போன்றவற்றின் உற்பத்தியை பெருக்குவதற்கு அடுத்து மல்லிகைச் செடிகளை விளைவித்து அதில் லாபம் பார்த்தும் வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் தங்கச்சிமடம் பகுதி முழுக்கவே மல்லிகைச் செடிகளை பயிரிட்டு தமிழகம் முழுவதும் மல்லிகை ஏற்றுமதி செய்துவருகிறது. அதேபோல, மல்லிகை நாற்று உற்பத்தியிலும் தங்கச்சிமடம்தான் கோட்டையாக இருந்துவருகின்றது.

‘‘ஒரு வருடத்தில் மூன்று மாதங்கள்தான் மல்லிகைப் பூக்களின் மூலம் வருமானம் கிடைக்கும். ஆனால், வருடத்தின் எல்லா மாதமுமே வருமானம் தரக்கூடிய தொழில் மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்வதில் தான் இருக்கிறது என்று சொல்கிறார் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மல்லிகை விவசாயி வசந்தகுமார். அவர் பேசும்போது, சிறுவயதில் இருந்தே எனக்கு மல்லிகை தொழில்தான். 10 வது படிக்கும்போதே இந்த தொழிலுக்கு வந்துவிட்டேன். பருவத்திற்கு ஏற்றபடி மல்லிகைப் பூக்களை பறித்து உள்ளூர் மற்றும் வெளியூர் பயன்பாட்டிற்கு அனுப்புவது, அதுபோக, தமிழ்நாடு மற்றும் இன்னும்பிற மாநிலங்களில் செயல்படுகிற நறுமண தொழிலகங்களுக்கு மூட்டை மூட்டையாக மல்லிகைப் பூக்களை அனுப்புவது வரை எல்லாமே எங்கள் ஊர் மல்லிகை தான்” என்கிறார் வசந்தகுமார்.

‘‘ராமேஸ்வரம் தீவில் உள்ள தங்கச்சிமடம், அரியாங்குண்டு, நொச்சியூரணி, பாம்பன் மற்றும் தீவுக்கு வெளியே உள்ள மண்டபம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் என சுமார் ஆயிரம் ஏக்கரில் மல்லிகைச் செடிகள், நாற்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றை நம்பி 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாக விவசாயத் தொழிலில் வாழ்ந்து வருகின்றனர்.தொடர்ந்து பேசியவர் ‘‘பொதுவாகவே மதுரை மல்லிக்கு தனிமவுசு இருக்கிறது. மதுரை மல்லிக்கு குண்டு மல்லி எனவும் பெயர் இருக்கிறது. அப்படி குண்டுமல்லிகை என பெயர் வந்ததற்கு காரணமே எங்கள் ஊர் மல்லிகை தான். எங்கள் ஊரில் பூக்கிற மல்லிகைப்பூ அளவில் பெரிதாக இருக்கும். அதற்கு காரணம் நோய்தன்மை இல்லாத தாய்ச்செடியும் எங்கள் ஊர் மண்வளமும் தான். இங்கிருந்து மதுரைக்கு செல்கிற மல்லிகை தான் மதுரை மல்லி. அதுமட்டுமில்லாமல், தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இங்கிருந்துதான் மல்லிகை செல்கிறது. இப்பகுதியை சுற்றி நல்ல தண்ணீர் இருப்பதாலும் செடிக்கு ஏற்றபடி உதிர்ந்து இறுகும் மண்வளம் இருப்பதாலும் தாய்ச்செடிகளும் நாற்றுகளும் நல்ல முறையில் வளர்கின்றன.

அதே போல, மல்லிகைப்பூ வளர்வதற்கான பருவம் தை,மாசி,பங்குனி சிறந்தது. அந்த மூன்று மாதமுமே மற்ற தொழில் பார்த்தவர்கள்கூட அந்த காலங்களில் மல்லிகை சார்ந்த ஏதேனும் தொழிலை செய்து வருமானம் பார்ப்பார்கள். அப்போ எல்லோரும் செடியோட தான் இருப்போம். அந்த சீசன்ல மட்டும் ஒரு கிலோ மல்லிகைப்பூ 500 ரூபாய்ல இருந்து 2500 ரூபாய் வரை போகும். ஆயிரம் மல்லிகைச்செடி இருந்தா போதும், அந்த சீசன்ல மட்டும் ஒரு லட்சத்திற்கு பூ விற்பனை ஆகும். 1000 மல்லிகைச்செடி இருந்தாலே போதும். அதுவே எங்களுக்கு வருமானமும் பொருளாதாரமும் தந்திடும். 1000 தாய்ச்செடியில இருந்து 8கிலோ வரை பூ எடுக்கலாம் . இந்தப் பூ சீசன்ல ஊருல எல்லாருக்கும் வேலை இருக்கும். பூ பறிக்க, பூ கட்ட, பூ விற்க அப்படினு அந்தந்தத் தொழில் தெரிஞ்ச ஆட்கள் அவங்கவங்க வேலையில பிஸியா இருப்பாங்க. 50 செண்ட் இருந்தாலே போதும். 1000 மல்லிகைத் தூர் போடலாம். கொறஞ்சது ஆறு மாதத்தில் இருந்தே அந்தச் செடிகள்ல இருந்து வருமானம் பார்த்திடலாம்.

மல்லிகை நாற்று வளர்ப்பு

எங்கள் ஊரில் இருக்குற தாய்ச் செடியில் இருந்து உற்பத்தி செய்யக்கூடிய மல்லிகை நாற்றுகளைத்தான், அதிக காசு கொடுத்து எல்லாரும் விரும்பி வாங்குவாங்க. இந்த வருடம் ஒரு மல்லிகை நாற்று மூன்றில் இருந்து எட்டு ரூபாய் வரை விற்பனை ஆகிறது. நாற்றுப் பராமரிப்பு என்பது மிகவும் கஷ்டமான வேலை . நம்ம குழந்தையை கவனிக்கிற மாதிரி தான் இந்தச் செடிகளையும் கவனிச்சிட்டு வரணும். பூஞ்சோலை நோய் , இலைச் சுருட்டு நோய் இதெல்லாம் செடிக்கு எப்ப வரும் போகும்ன்னு யாருக்கும் தெரியாது. இந்த நாற்று விற்பனையில் மட்டும் வருசத்துக்கு இரண்டு லட்சம் வரை சம்பாதிக்கலாம். அதே சமயம் சரியான பராமரிப்பு இல்லாம மொத்த செடியும் அழுகிப் போவதும் நடக்கும். இந்தச் செடிகள் தொடர்ந்து 45 நாட்கள் கண்டிப்பான பராமரிப்பில் இருக்கணும் . பனை ஓலைகளாலும் தென்னங்கிடுகு களாளும் பந்தல் போடணும். அந்தப் பந்தல் உள்ளதான் இந்த நாற்றுகள் வளர வைக்கனும். நம்ம ஊர் கோயில்கள்ல முளைப்பாரி வளர்ப்பாங்கல்ல, அந்தமாதிரிதான் மல்லிகை நாற்றுகளை வளர்க்கனும். நாற்று நட்ட முதல் முப்பது நாட்களுக்கு சூரியஒளி , காற்று ஏதும் படாம பாத்துக்கணும். அதே நேரத்துல நாற்றுகளுக்கு சீரான முறையில் தினமும் தண்ணீர் விடணும். செடியோட ஒவ்வொரு வளர்ச்சியையும் தினந்தினம் கவனுச்சிக்கிட்டே இருக்கணும். பொதுவாகவே எங்கள் ஊர் நிலத்தடி நீர்மட்டமானது பதினைந்து அடியிலேயே இருப்பதால் மல்லிகை வளர்ச்சிக்கு தேவையான தண்ணீர் பஞ்சமில்லாமல் கிடைக்கிறது. குறிப்பிட்ட ஆழத்திலேயே நீர் இருப்பதால் எங்கள் ஊர் மணலில் வளர்கிற செடிகளுக்குத் தேவையான நீர்ச்சத்து, தாதுச்சத்து இயற்கையிலேயே அதிகமாக இருக்கிறது. தாய்ச்செடியில் இருந்து பதியம் வைக்கப்படுகிற நாற்றுகளுக்கு இயற்கை முறையிலான உரங்களே பயன்படுத்துவதால் எங்கள் ஊரில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிற நாற்றுகள் 25 வருடம் வரை பயனளிக்கிறது என்கிறார்.

மண்ணை நம்புனா மகசூல்

மல்லிகை நாற்றுகள் நடுவதற்கு முன்பாக மண்ணை தயார் படுத்துவது அவசியம். தேர்ந்தெடுத்த நிலத்தை நாற்று நடுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே மண்வெட்டியால் நன்றாக கொத்தி விட வேண்டும். அப்போது தான் நாற்று வேர்கள் மண்ணில் வேர்ஊன்றி ஆரோக்கியமாக வளரும். பிறகு, இயற்கை உரங்களான மாட்டுச்சாணம், கோமியம், ஆட்டு புழுக்கைகள் போன்றவற்றை மண்ணில் கலந்து மண்ணை வெட்டி பதியம் போடுவதற்கு முன்புவரை நன்றாக தண்ணீர் விட்டு நிலத்தை குளிர விட வேண்டும். அதேபோல, நாற்று நடுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னே தென்னை ஓலைகளால் கொட்டகை இட்டு மண் சூடாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

The post மல்லிகைக்கு கைகொடுக்கும் தங்கச்சிமடம் பதியங்கள் appeared first on Dinakaran.

Tags : Thangachimadam Patiyam ,Mallikai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...