×

திருப்பதியில் புகழ்பெற்ற கங்கையம்மன் கோயில் திருவிழா நாளை தொடக்கம்-பக்தர்களுக்கு எம்எல்ஏ அழைப்பு

திருமலை : திருப்பதியில் புகழ் பெற்ற தாத்தைய்ய குண்டா கங்கை அம்மன் கோயில் திருவிழா வரும் 9ம் தேதி (நாளை) தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மன் அருள் பெற வேண்டும் என திருப்பதி எம்எல்ஏ கருணாகர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து திருப்பதி எம்எல்ஏ கருணாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதியின் கிராம தேவதை என அழைக்கப்படும் தாத்தைய்ய குண்டா கங்கை அம்மன் கோயில் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமியால் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த புனரமைப்பு பணிகளின் போது கோயிலின் அஸ்திவாரத்தை தோண்டிய போது 12 அடிக்கு கீழ் கிடைக்கப்பெற்ற ஒரு தூணில் இந்த கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாகவும். அதன் பிறகு பல்வேறு மன்னர்கள் ஆட்சியில் தொடர்ந்து இருந்ததாக டெல்லியில் இருந்து வந்த தொல்லியல் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் இருந்தபோது ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தில் அவர்கள் தலையிட விரும்பவில்லை. எனவே இதன் நிர்வாகத்தை ஹத்திராம்ஜி மடத்திற்கு வழங்கினர்.

அப்போது ஏழுமலையான் கோயிலுடன் அதன் துணை கோயில்களாக கபில தீர்த்தம், கோதண்ட ராமசுவாமி, கோவிந்தராஜ சுவாமி, கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி, திருச்சானூர் பத்மாவதி தாயார் உட்பட பல்வேறு கோயில்களுடன் திருப்பதியில் உள்ள தாத்தைய்ய குண்ட கங்கை அம்மன் கோயிலும் வழங்கப்பட்டது.

அதன் பிறகு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்யப்பட்ட போது மீண்டும் ஹத்திராம்ஜி மடத்தின் நிர்வாகத்திடமிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நிர்வாகம் ஒப்படைக்கும் போது இந்த கங்கை அம்மன் கோயில் மட்டும் அதில் இடம்பெறவில்லை. இங்கு ஆடு, கோழி, உள்ளிட்ட உயிர் பலி வழங்குவதால் இது ஒரு காரணமாக இருக்கலாம் என அறியப்படுகிறது.

மேலும் ஏழுமலையானுக்கு மலர் கைங்கர்யம் செய்வதற்காக ராமானுஜரால் நியமிக்கப்பட்ட அனந்தாழ்வார் திருமலையில் அனந்தாழ்வார் ஏரியாக தற்போது அழைக்கப்படும் குளத்தை கடப்பாரையால் வெட்டியுள்ளார். தனது குருவான திருமலை நம்பியை தாத்தா தாத்தா என அவர் அழைப்பது வழக்கம். இந்நிலையில், அவர் அதே கடப்பாரை கொண்டு திருப்பதியில் அவரின் நினைவாக திருப்பதியில் கங்கை அம்மனுக்கு குளத்தை வெட்டினார். பின்னர் கங்கை அம்மன் கோயிலையும் புனரமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தான் இந்த கங்கை அம்மனுக்கு தாத்தைய்ய குண்டா (குளம்) என பெயர் வந்துள்ளது. மேலும் சீனிவாச பெருமாளுக்கு அக்காலத்தில் பிரமோற்சவம் போன்றவை கிடையாது. திருநாள் விழா என்று அழைக்கப்படும். அதேபோன்று திருநாள் விழா கங்கை அம்மனுக்கும் நடைபெற வேண்டும் என முடிவு செய்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த திருநாளின் போது ஏழுமலையான் கோயிலில் இருந்து தனது சகோதரிக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த சம்பிரதாயம் தற்பொழுதும் தொடர்கிறது.

எனவே இவ்வளவு சிறப்பு மிக்க இந்த கங்கை அம்மன் கோயில் திருவிழா வரும் 9ம் தேதி(நாளை) தொடங்கி 16ம் தேதி விஸ்வரூப தரிசனத்துடன் நிறைவு பெறுகிறது.
இந்த திருநாளில் கடந்த காலங்களில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். அதே போன்று தற்போதும் அனைவரும் வந்து திருவிழாவில் பங்கேற்று அம்மன் அருள் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post திருப்பதியில் புகழ்பெற்ற கங்கையம்மன் கோயில் திருவிழா நாளை தொடக்கம்-பக்தர்களுக்கு எம்எல்ஏ அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Gangayamman Temple Festival ,Tirupathi ,Tirumalai ,Kunda Ganga Ganga Amman Temple Festival ,Tirupati ,MLA ,
× RELATED திருப்பதி, திருமலையில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது..!!