×

கடம்பூர் அருகே ரயில்வே சுரங்கப்பாலத்தில் தேங்கிய மழைநீர்-கிராமம் தீவுபோல் மாறியதால் 2 நாட்களாக முடங்கிய மக்கள்

கயத்தாறு : கடம்பூர் அருகே ரயில்வே சுரங்கப்பாலத்தில் தேங்கிய மழைநீரால், கிராமத்திலேயே 2 நாட்களாக மக்கள் முடங்கி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகாவுக்கு உட்பட்ட கடம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் கடம்பூர் அருகே உள்ள கோடங்கால் கிராமத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.

கழுத்து வரை மூழ்கும் அளவுக்கு மழைநீர் தேங்கி இருப்பதால் கிராம மக்கள் வெளியே சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவசர தேவைக்கு செல்ல வேண்டும் என்றால் மழைநீரில் நீந்தித்தான் செல்ல வேண்டியுள்ளது, அல்லது சுரங்கப்பாலத்தில் உள்ள தண்டவாளத்தின் வழியாக சுவர்கள் மீது ஆபத்தான முறையில் நடந்து செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் கோடங்கால் கிராமம் தீவு போன்று மாறியுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் கிராமத்திற்குள் வரவோ, வெளியே செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியது குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த ரயில்வே சுரங்கப்பாலம் அமைக்கும் போதே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அருகில் கண்மாய் இருப்பதால் எளிதில் ரயில்வே சுரங்கப்பாலத்தில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்படும், தங்களுக்கு மாற்று வழியில் பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால் எதையும் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் சுரங்கப்பாலம் அமைத்ததால் ஒவ்வொரு மழையின்போதும் கோடங்கால் கிராமம் தீவுபோல் மாறி வருவதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.வழக்கமாக மழைக்காலங்களில் ரயில்வே சுரங்கப்பாலத்தில் தண்ணீர் தேங்கும்போது, ரயில்வே நிர்வாகம் சார்பில் மோட்டார் வைத்து நீரை வெளியேற்றுவது வழக்கம். ஆனால் தற்போது 2 நாட்களுக்கு மேலாக மழைநீர் தேங்கி இருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கோடங்கால் கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

The post கடம்பூர் அருகே ரயில்வே சுரங்கப்பாலத்தில் தேங்கிய மழைநீர்-கிராமம் தீவுபோல் மாறியதால் 2 நாட்களாக முடங்கிய மக்கள் appeared first on Dinakaran.

Tags : Kadampur ,Kayathar ,Kadampur- village ,Dinakaran ,
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு