×

20 பேரை மிதித்து கொன்ற அரிக்கொம்பன் யானை நடமாட்டம் இருப்பதால் மேகமலையில் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் : தேனி ஆட்சியர் எச்சரிக்கை!!

தேனி : மேகமலை பகுதியில் அரிக்கொம்பன் யானையின் நடமாட்டம் இருப்பதால் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தேனி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: “தேனி மாவட்டம், மேகமலை கோட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க “அரிக்கொம்பன்” என்ற ஒற்றை காட்டுயானை நுழைந்துள்ளது. இந்த யானை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட தேவிகுளம் வட்டம், சாந்தம்பாறை ஊராட்சி பகுதியில் சுற்றித்திரிந்து வந்தது. இந்த யானையானது கடந்த மாதம் 29-ந்தேதி கேரள வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, 30-ந்தேதி அதிகாலை 5 மணியளவில் கேரள மாநிலம், பெரியாறு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட முல்லாக்குடி எனும் பகுதியில் விடப்பட்டது.

இந்நிலையில், இந்த ஒற்றை காட்டுயானையானது கடந்த 1-ந்தேதி அதிகாலை சுமார் 6 மணியளவில் கூடலூர் வனச்சரகத்திற்குட்பட்ட தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்தது. நேற்று காலை நிலவரப்படி, ‘அரிக்கொம்பன்’ காட்டுயானையானது சின்னமனூரில் இருந்து ஹைவேவிஸ் (மேகமலை) செல்லும் சாலையில் 10-வது வளைவில் நேரடியாக காணப்பட்டு வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், யானையின் நடமாட்டம் தொடர்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேரள வனத்துறையிடம் இருந்து அரிக்கொம்பன் யானை நடமாடிய பகுதிகளை புவியிடங்காட்டியின் (ஜி.பி.எஸ்) மூலம் பெறப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல், மேகமலை பகுதிக்கு செல்வதற்கு நுழைவுவாயிலாக உள்ள வனத்துறையின் தென்பழனி சோதனைச்சாவடி மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக 20 போலீசார் தென்பழனி சோதனை சாவடி பகுதியிலும், 20 போலீசார் மேகமலை ஹைவேவிஸ் பகுதியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த யானையின் கழுத்துபகுதியில் பொருத்தப்பட்ட கருவியில் செயற்கைக்கோள் மூலமாக கிடைக்கும் தகவல்கள், புலிகள் காப்பக துணை இயக்குனர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கூடலூர், கம்பம் (கிழக்கு) மற்றும் சின்னமனூர் வனச்சரகர்கள் தலைமையில் 3 தனித்தனியான குழுக்கள் அமைக்கப்பட்டு யானையின் நடமாட்டம் இரவு, பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, மேகமலை வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். மேகமலை வனப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து வனத்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தக்க ஒத்துழைப்பு தர வேண்டும்” இவ்வாறு கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 20 பேரை மிதித்து கொன்ற அரிக்கொம்பன் யானை நடமாட்டம் இருப்பதால் மேகமலையில் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் : தேனி ஆட்சியர் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Tags : Megamalai ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...