×

நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் சசிகலா: மனதில் இருந்த பாரத்தை இறக்கிவிட்டேன் என பேட்டி

சென்னை: நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு, சசிகலா நேற்று ஜெயலலிதா நினைவிடம் சென்று, மலர் தூவி கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். சசிகலாவை வரவேற்க அதிமுக கொடியுடன் தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்ற சசிகலா தண்டனை காலம் நிறைவடைந்து கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையானார். பின்னர், பிப்ரவரி மாதம் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது, அவர் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். சென்னை திரும்பியதும் சசிகலா, ஜெயலலிதா நினைவிடம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் செல்லவில்லை.இந்தநிலையில், நேற்று காலை 9.30 மணியளவில் தி.நகரில் உள்ள இளவரசியின் இல்லத்தில் இருந்து, ஜெயலலிதா நினைவிடம் நோக்கி, அதிமுக கொடி கட்டப்பட்ட ஜெயலலிதா பயன்படுத்திய காரில் புறப்பட்டார்.  அவருக்கு, வழிநெடுகிழும் தொண்டர்கள் அதிமுக கொடியை கையில் வைத்துக்கொண்டு வரவேற்பு அளித்தனர். சசிகலாவின் காரின் இருபுறமும் அவரது ஆதரவாளர்கள் பைக் மற்றும் கார்களில் பின்தொடர்ந்து நினைவிடம் நோக்கி வந்தனர். பின்னர், சுமார் 12 மணியளவில் ஜெயலலிதா நினைவிடம் வந்தார். ஜெயலலிதாவின் நினைவிடத்தை கண்டதும் கண்ணீர் சிந்தினார். பின்னர், மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், 10 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சசிகலா சிறை செல்லும் முன்பாக ஜெயலலிதா நினைவிடத்தில் சபதம் எடுத்துக்கொண்டார். இந்தநிலையில், நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, இன்று காலை 10 மணியளில் தி.நகரில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு செல்கிறார். பின்னர், மதியம் 12 மணியளவில் ராமாவரம் இல்லத்திற்கு செல்வார். சிறையில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா 8 மாதங்களுக்கு பிறகு நேற்று ஜெயலலிதா நினைவிடம் சென்றுள்ளார். தொடர்ந்து வரும் நாட்களில் மாவட்டம் தோறும் தொண்டர்களை சந்திக்கவும், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும் சசிகலா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீவிர அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் அவர் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதா நினைவிடத்திற்கு நான் ஏன் தாமதமாக வந்தேன் என்பது உங்களுக்கும் தெரியும். தமிழக மக்களுக்கும் நன்றாக தெரியும். ஜெயலலிதாவுடன் நான் இருந்த காலங்கள் என் வயதில் முக்கால் பகுதியாகும். நானும் ஜெயலலிதாவும் பிரிந்ததே இல்லை. இந்த 5 ஆண்டு காலத்தில் எனது மனதில் இருந்த பாரத்தை நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காகவே வாழ்ந்தவர்கள். தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர்கள். ஜெயலலிதா நினைவிடத்தில், நான் நடந்த விஷயங்களையும், ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதையும் செல்லிவிட்டு வந்துள்ளேன். இவ்வாறு கூறினார்….

The post நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் சசிகலா: மனதில் இருந்த பாரத்தை இறக்கிவிட்டேன் என பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jayalalitha ,Sasigala ,Chennai ,Jayalalithah ,Malka ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...