×

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற போவது ஐஏஎஸ்சா? ஐபிஎஸ்சா?: மல்லுக்கட்டும் மாஜி அதிகாரிகள்

சென்னை: மக்களவை தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் தேர்தல் என்பதால் கர்நாடக தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்துள்ளது. அதேநேரத்தில் இந்த தேர்தலில் வெற்றி பெறப்போவது ஐஏஎஸ்சா, ஐபிஎஸ்சா என்ற பரபரப்பும் தற்போது கர்நாடகாவில் எழுந்துள்ளது. இந்த, கூடுதல் பரபரப்புக்கு காரணம் மல்லுக்கட்டும் இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். கர்நாடகாவில் வருகிற 10ம் தேதி, அதாவது நாளை மறுநாள் சட்டமன்றத்துக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் இன்று மாலையுடன் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது.

அதாவது, மக்களவை தேர்தலுக்கு முன்னர் கர்நாடகா மாநில தேர்தல் நடைபெறுகிறது. இதனால், இந்த தேர்தல் இந்திய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. அதோடு, தென் மாநிலங்களில் பாஜ ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம், கர்நாடகா மட்டும்தான். கடந்த தேர்தலில், இந்த மாநிலத்தில் காங்கிரஸ்தான் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், காங்கிரசில் இருந்து எம்எல்ஏக்களை இழுத்து, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜ. இதனால் புறவாசல் வழியாக ஆட்சியைப் பிடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், தென் மாநிலங்களில் ஒரு மாநிலத்திலாவது ஆட்சியில் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்ற மாநிலங்களில், மாநிலக் கட்சிகளுடன் போட்டி போட வசதியாக இருக்கும் என்று பாஜ தலைமை நினைத்தது.

இதனால், கர்நாடகா தேர்தலில் வெற்றி பெறுவதை பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கவுரவ பிரச்னையாக பார்க்கிறது. கர்நாடகா அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் அள்ளி வீசியது. ஆனால், தனிப்பட்ட முறையில் தன்னை தாக்குவதாக மோடி காங்கிரஸ் மீது குற்றம்சாட்டினார். ஆனாலும், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியானது. இதனால், பிரதமர் மோடி, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிக அளவில் கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். குறிப்பாக சாலையில் நடை பயண பிரசாரம் செய்தார். அமித்ஷாவும் அதிக நாட்கள் பிரசாரம் செய்தார். அதோடு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ம.பி.முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களும் கர்நாடகாவில் முகாமிட்டு பாஜவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தி, சோனியா, பிரியங்கா, கார்கே மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஸ்பாகல் ஆகியோரும் பிரசாரம் செய்தனர். இப்படி, இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்தாலும், உள்ளூர் பிரச்னைகள் முதல் அதிகாரிகளை சமாளிப்பது, ரவுடிகளை சமாளிப்பது, தேர்தல் யுக்திகளை கையாளுவது என இரு கட்சிகளும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை களம் இறக்கியுள்ளன.

ஆளும் பாஜவின் தேர்தல் இணை ஒருங்கிணைப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இவர், கர்நாடகாவில் கூடுதல் எஸ்பி, எஸ்பியாக பணியாற்றியவர். தமிழ்நாட்டில் கரூரைச் சேர்ந்த அண்ணாமலை, 2011ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, உடுப்பி மாவட்டம் கார்கலா பகுதியில் கூடுதல் எஸ்பியாக நியமிக்கப்பட்டார். பின்னர் பதவி உயர்வு பெற்று அதே மாவட்டத்தில் எஸ்பியாக நியமிக்கப்பட்டார். இவர் கர்நாடக மாநிலத்தின் சிங்கம் என்று அழைக்கப்பட்டார். பின்னர் சிக்மகளூர் எஸ்பியாகவும் 2018ம் ஆண்டு பணியாற்றினார். 2019ம் ஆண்டு தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு விவசாயம் செய்யப்போவதாக கூறினார். 2021ல் தமிழக பாஜ தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர், கர்நாடகாவில் பணியாற்றியபோது தற்போது பாஜ இளைஞர் அணி தலைவராக உள்ள சூர்யா, ஆர்எஸ்எஸ் பிரமுகரும் பாஜவின் தேசிய பொதுச் செயலாளருமான சந்தோசின் நட்பை பெற்றார். இதனால் அண்ணாமலையை
தமிழ்நாட்டில் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏன் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இவரை பாஜ, கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது. அவர் கூடுதல் எஸ்பி மற்றும் எஸ்பியாக பணியாற்றியதாலும், அவருடன் ஐபிஎஸ் பணியில் சேர்ந்த பலர் தற்போது எஸ்பிக்களாக உள்ளதாலும், அவரிடம் பணியாற்றிய பலரும் எஸ்பிக்கள், கூடுதல் எஸ்பிக்களாக பணியாற்றி வருவதாலும், தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

இவர் வேட்பாளரை தேர்வு செய்வது, உள்ளூர் போலீஸ் மற்றும் கலெக்டர்களுடன் நேரடியாக பேசி, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் பணியையும் செய்து வந்தார். அதோடு தேர்தல் புகார்கள் வந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. இதனால் தொண்டர்கள் மற்றம் கட்சியின் நிர்வாகிகளுக்கும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கும் இணைப்பு பாலமாக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். குறிப்பாக சொல்லப்போனால், முதல்வர் பொம்மை மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை விட அதிக பவர்புல் ஆளாக அண்ணாமலை வலம் வருகிறார். இதனால் பாஜ வெற்றி பெற்றால் அதற்கு பெரும் பங்கு அண்ணாமலையைச் சாரும். அதேபோல தோல்வி அடைந்தாலும் அவரையே சாரும் என்று குற்றம்சாட்டப்படுகிறது. அதற்கு காரணம், வேட்பாளர்களைப் பற்றிய முழுமையாக அறிக்கையை கட்சியின் தலைமைக்கு கொடுத்து யாருக்கு சீட் கொடுக்க வேண்டும், யாருக்கு கொடுக்கக் கூடாது என்ற பரிந்துரையையும் அவர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல, சென்னையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பணியில் ராகுல் காந்தியால் இறக்கி விடப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த சசிகாந்த் செந்திலின் அப்பா, சண்முகம், மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது அம்மாவும் ஒன்றிய அரசு அதிகாரியாக பணியாற்றியவர். சென்னையில் படித்த சசிகாந்த் செந்தில், ஆரம்பத்தில் ஐடி கம்பெனியில் பணியாற்றினார். 2009ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உதவி ஆணையராக பணியில் சேர்ந்தார். பின்னர் ராய்ச்சூர் மாவட்டம் சித்ரதுர்க்காவில் துணை ஆணையராகவும் பணியாற்றியவர். 2016ம் ஆண்டு சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2017ம் ஆண்டு தக்சின் கர்நாடகா பகுதியில் பணியாற்றியபோது, பாஜவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தஇவர், தமிழக காங்கிரசில் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். ராகுல்காந்திக்கு நெருக்கமான சசிகாந்த் செந்தில், தற்போது கர்நாடகா மாநில தேர்தல் பொறுப்பாளராக
நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் கடந்த 2 மாதங்களாக கர்நாடகாவில் முகாமிட்டு தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு, உள்ளூர் பிரச்னைகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பாஜவுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்தல், கட்சிக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் பாலமாக செயல்படுதல், தேர்தல் புகார்களை ஒருங்கிணைத்தல், வார் ரூம் பொறுப்பாளர் என்று பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இவரும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

இதனால், கர்நாடகா மாநில தேர்தல் வெற்றி அல்லது தோல்வியைப் பொறுத்தளவில் அண்ணாமலை வெற்றி பெறுவாரா? சசிகாந்த் செந்தில் வெற்றி பெறுவாரா? என்று கர்நாடகா ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில் கூடுதல் பரபரப்புக்கு காரணம் இருவரும் அரசியல் ஈடுபாடு காரணமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவியை ஒரே மாநிலத்தில் ராஜினாமா செய்து விட்டு கட்சியில் சேர்ந்துள்ளனர். இருவரும் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதும், இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் இந்த தேர்தல் பரபரப்புக்கு காரணமாக விளங்குகிறது. மேலும் யாருடைய யுக்திக்கு வெற்றி கிடைக்கிறது என்ற பரபரப்பு இரு கட்சிகளிலும் எழுந்துள்ளது.

The post கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற போவது ஐஏஎஸ்சா? ஐபிஎஸ்சா?: மல்லுக்கட்டும் மாஜி அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : IAS ,Karnataka assembly elections ,IPSa ,Mallukattam ,CHENNAI ,Lok Sabha elections ,Karnataka elections ,Karnataka Legislative Assembly elections ,Dinakaran ,
× RELATED சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு...