×

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலால் கெடுபிடி; சேலம் வெள்ளி பட்டறைகள் முடங்கியது: வட மாநில ஏற்றுமதி பாதிப்பு

சேலம்: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலால் கடும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெள்ளிப்பொருட்கள் குறைந்துள்ளதோடு, சேலத்தில் உற்பத்தி 50 சதவீதம் வரை சரிந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.சேலத்தில் செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, பள்ளப்பட்டி, சிவதாபுரம், பனங்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப்பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கின்றனர். இங்கு வெள்ளி கால்கொலுசு, அரைஞாண்கொடி, சந்தனகிண்ணம், குங்குமச்சிமிழ், டம்ளர், வெள்ளிதட்டு உள்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

வடமாநிலங்களில் சேலம் வெள்ளிக்கு எப்போதும் தனி மவுசு உள்ளது. கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பிலிருந்து வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி, விற்பனை நல்லமுறையில் இருந்தது. கடந்த தை, மாசி மாதத்தில் விற்பனை பல மடங்கு அதிகரித்தது. இந்நிலையில், கர்நாடகத்தில் தேர்தல் அறிவித்தபின், சேலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு வெள்ளிப்பொருட்கள் கொண்டு செல்வது குறைந்துள்ளது. இதனால் சேலத்தில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தியும் சரிந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினைஞர்கள் நலச்சங்க தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது: சேலம் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு பிறகு வெள்ளிப்பொருட்கள் ஆர்டர்கள் அதிகளவில் இருந்தது. அவ்வப்போது உற்பத்தி செய்யப்பட்ட வெள்ளிப்பொருட்களை தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் விற்பனை அனுப்பி வந்தோம். தற்போது, கர்நாடகாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு தேர்தல் கட்டுப்பாடு அமலுக்கு வந்தபின், வாகன சோதனையில் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப்பொருட்கள் பெரும்பாலும் ரயில் மற்றும் காரில் தான் வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தமிழகத்தில் இருந்து செல்லும் 40 சதவீதம் ரயில்கள் கர்நாடகா வழியாகவும், 30 சதவீதம் ரயில்கள் ஆந்திரா வழியாகவும், மீதமுள்ள 20 சதவீத ரயில்கள் கேரளா வழியாக
செல்கிறது.

ரயில் மற்றும் காரில் எந்த வழியாக வெள்ளிப்பொருட்கள் கொண்டு சென்றால் தேர்தல் அதிகாரிகள் சோதனையிடுகின்றனர். முறையாக பில் இருந்தாலும் சில நேரங்களில் வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக வட மாநிலங்களுக்கு வெள்ளிப்பொருட்கள் கொண்டு செல்வது குறைந்துள்ளது. சேலத்தில் உள்ள வெள்ளிப்பட்டறைகளில் ஒரு மாதமாக உற்பத்தி 50 சதவீதம் வரை சரிந்துள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பட்டறைகளில் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி நடக்கிறது. ெவள்ளிப்பொருட்கள் உற்பத்தி சரிவால் தொழிலாளர்களுக்கு வருவாய் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலால் கெடுபிடி; சேலம் வெள்ளி பட்டறைகள் முடங்கியது: வட மாநில ஏற்றுமதி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka Assembly ,Elections ,Salem ,Karnataka ,assembly elections ,North ,Dinakaran ,
× RELATED ம.பி தேர்தல் பாஜ 2வது பட்டியலில் 3 ஒன்றிய அமைச்சர்கள்