×

வேலூர் உட்பட 17 மாவட்டங்களில் ரேஷன் கடை, கூட்டுறவு வங்கிகளில் கியூஆர் கோடு பணபரிவர்த்தனை அறிமுகம்: இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வருகிறது

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட 17 மாவட்டங்களில் ரேஷன் கடை, கூட்டுறவு வங்கிகளில் கியூ ஆர் கோடு பணவரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரேஷன் கடைகளில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முறைகேடுகளை தடுக்க கைரேகை வைத்தால்தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல் ஆன்லைனிலேயே ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்கம் செய்ய முடியும். இதேபோல் ரேஷன் கடைகளில் வழக்கமான பொருட்களுடன் கேழ்வரகு விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் தற்போது வரை ரொக்க பணப்பரிமாற்றமே இருக்கிறது. கியூ ஆர் கோடு வழியாக பணப்பரிமாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை பரிசீலித்து வந்த தமிழக அரசு கியூ ஆர் கோடு மூலம் அதாவது யுபிஐ மூலம் பணப்பரிவர்த்னை செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் மின்னணு பரிமாற்றம் கியூ ஆர் கோடு மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
கூட்டுறவுத்துறையில் மின்னணு பண பரிமாற்றம் நடைமுறை மேற்கொள்ள கடந்த சில மாதங்களாக பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கூட்டுறவுத்துறையில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும், அதன் 922 கிளைகளிலும் ஐஎம்பிஎஸ் வசதி மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த இரண்டு வார காலத்தில் 17 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதாவது, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கோவை, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய 17 மாவட்டங்களை உள்ளடக்கிய 12 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இந்த யுபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 17 மாவட்டங்களில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் இந்த பணமற்ற மின்னணு பரிவர்த்தனை சேவை துவங்கப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக மாநிலத்திலேயே முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 683 கூட்டுறவு நிறுவனங்களில் இந்த பணமற்ற மின்னணு பரிவர்த்தனை வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மீதமுள்ள 23 மாவட்டங்களை உள்ளடக்கிய 12 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் மே 15ம்தேதிக்குள் யுபிஐ வசதி தொடங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 33,814 கூட்டுறவு நியாய விலைக்கடைகள், 4,453 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், 25 மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள், 113 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள், 40 மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 1,715 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் ஆகிய அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் மே மாத இறுதிக்குள்ளாக இந்த பணமற்ற மின்னணு பரிவர்த்தனை சேவை அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வேலூர் உட்பட 17 மாவட்டங்களில் ரேஷன் கடை, கூட்டுறவு வங்கிகளில் கியூஆர் கோடு பணபரிவர்த்தனை அறிமுகம்: இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.

Tags : districts ,Vellore ,Tirupattur ,Ranipetta ,Dinakaran ,
× RELATED ஒரே நாளில் ₹8.20 கோடிக்கு மது விற்பனை...