![]()
சித்தூர்: ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மார்ளபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பா (35). இவரது குடும்பத்தினருக்கும், எதிர் வீட்டினருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது வெங்கடப்பாவின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த டாலருடன் கூடிய 6 சவரன் செயின் அறுந்து கீழே விழுந்து காணாமல் போய்விட்டதாம். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடப்பா, கிராம பெரியவர்களிடம் புகார் தெரிவித்தார். அவர்கள், வெங்கடப்பா தகராறில் ஈடுபட்டபோது யார் யார் இருந்தார்களோ அவர்கள் அனைவரும் 7ம்தேதி (இன்று) ராஜநாலாபன்டா ஆஞ்சநேயர் சுவாமி கோயிலுக்கு வந்து சத்தியம் செய்ய வேண்டும் என கூறினர். பொய் சத்தியம் செய்தால் அவர்கள் இறந்து விடுவார்கள் என்ற ஐதீகம் இந்த கிராமத்தில் உள்ளது.
இந்நிலையில் வெங்கடப்பா நேற்று காலை தனது வீட்டு கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது மாயமான அவரது மனைவியின் செயின் வீட்டு வாசலில் வீசபட்டிருந்ததாம். இதுகுறித்து கிராமப் பெரியவர்களிடம் தெரிவித்தார். இதனால் கிராம பெரியவர்கள், வெங்கடப்பா குடும்பத்தினர் உள்பட கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ராஜ நாலா பண்ட ஆஞ்சநேயர் சுவாமி கோயில் நகையை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதுகுறித்து ராஜநாலபண்ட கோயில் பூஜாரி ஈஸ்வர் கூறியதாவது: ராஜநாலா பண்ட ஆஞ்சநேயர் சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். சுற்றுப்புற கிராமங்களில் யாராவது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டாலும் அல்லது தவறான செயல்களில் ஈடுபட்டாலும், தீய பழக்கங்களுக்கு அடிமையானாலும், தகாத உறவு வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலோ அவர்களை நாங்கள் தவறு செய்யவில்லை என ஆஞ்சநேயர் சுவாமி கோயில் முன்பு ஒவ்வொரு சனிக்கிழமையும் சத்தியம் செய்ய அழைத்து வருவார்கள். சத்தியம் செய்வதற்கு முன்பு நாங்கள் குற்றம் சாட்டப்பட்ட நபரை அழைத்து தனியாக பேசி உண்மையை ஒத்துக் கொள்ளும்படி சொல்வோம்.
ஆனால் அவர்கள் தவறு செய்யவில்லை என தெரிவித்தால் சத்தியம் செய்ய அழைப்போம். அவ்வாறு பொய் சத்தியம் செய்தால் அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும். இதனால் இந்த கோயிலில் பொய் சத்தியம் செய்ய யாரும் முன்வருவதில்லை. குற்றத்தை ஒத்துக் கொள்பவர்களே அதிகமானோர் இங்கு வருகிறார்கள். மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என்பதால், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானாவில் இருந்தும் வந்து சத்தியம் செய்து செல்கிறார்கள் என்றார்.
The post கோயிலில் சத்தியம் செய்ய பயந்து திருடிய நகை வீட்டில் வீச்சு: சித்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.
