×

அம்முண்டியில் 12 செ.மீ மழை பதிவு தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி வேலூரில் மரம் முறிந்து மின்கம்பங்கள் சேதம்

வேலூர், மே 7: வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. வேலூர் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக 100டிகிரிக்கு குறைவாக வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் பகல் 12 மணி வரை வெயில் கொளுத்தியது. பின்னர் 1 மணிக்கு பிறகு மேகமூட்டம் காணப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி 25வது வார்டு 9வது தெருவில் உள்ள மரம் மழையின் காரணமாக விழுந்தது. அப்போது, சாலையோரம் இருந்த மின்கம்பி மீது மரத்தின் கிளை விழுந்தது. இதில் 2 மின் கம்பங்கள் உடைந்து சேதமானது. இதனால் அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் உடைந்த மின் கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின்கம்பங்கள் மாற்றி மின் இணைப்பு வழங்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தொடரந்து நேற்றும், மாவட்டத்தில் பிற்பகல் 1 மணியளவில் பரவலாக மழை பெய்தது. திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தப்படியே சென்றனர். அதேபோல், கொணவட்டத்தில் திடீர் நகர், சமத் நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் அகற்றும் பணியை கமிஷனர் ரத்தினசாமி ஆய்வு செய்தார். அப்போது, 4வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் உடனிருந்தார். தொடர் மழையால் கோடை வெயில் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்முண்டியில் 120.60 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை விவரம் (மில்லிமீட்டரில்): குடியாத்தம்-18.4, மேல் ஆலத்தூர்-17.8, காட்பாடி-15.6, மேலாத்தூர் 24.2, பொன்னை 27, வேலூர் சர்க்கரை ஆலை(அம்முண்டி)-120.6, வேலூர்-39.8, கே.வி.குப்பம் 20.2 என மொத்தம் 265.80 மி.மீ மழை பதிவானது.

The post அம்முண்டியில் 12 செ.மீ மழை பதிவு தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி வேலூரில் மரம் முறிந்து மின்கம்பங்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Ammundi ,Vellore ,Vellore district ,Tamil Nadu ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...