×

குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் வேங்கைவயலில் நீதிபதி விசாரணை: 2 மாதத்ததில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் என பேட்டி

புதுக்கோட்டை:குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக வேங்கைவயலில் ஒரு நபர் ஆணைய நீதிபதி விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக 2 மாதத்ததில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார் . புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் டிசம்பர் 26ம் தேதி மனிதக்கழிவு கலந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில், சந்தேகத்துக்கிடமான 21 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதில் காவலர் உள்பட 3 பேரிடம் மட்டும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு நாளை (8ம்தேதி) டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட உள்ளது.

இந்நிலையில், ேவங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை சென்னை உயர்நீதிமன்றம், அமைத்தது. அதன்படி அவர் நேற்று காலை வேங்கை வயலுக்கு வந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அருகிலேயே புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளை பார்வையிட்டார். தொடர்ந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதா ராமு, எஸ்பி வந்திதா பாண்டே, சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி உள்ளிட்ட 18 அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் நீதிபதி சத்யநாராயணன் அளித்த பேட்டி: வேங்கைவயல் விவகாரத்தில் இரண்டு மாத காலத்திற்குள் உயர்நீதிமன்றத்தில் எனது அறிக்கையை தாக்கல் செய்வேன். சிபிசிஐடி போலீசாரை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடிக்கும்படி கூற முடியாது. அவ்வாறு கூறினால் உண்மையான குற்றவாளிகளை பிடிக்க முடியாது. இது ஒரு வித்தியாசமான வழக்கு என்பதால் அறிவியல் பூர்வமான சாட்சிகளை தான் அவர்கள் சேகரித்து வருகின்றனர். சிபிசிஐடி போலீசார், 2 வகையாக விசாரணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம். ஒன்று குற்றவாளியை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தலாம். அல்லது குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறலாம். இந்த வழக்கை பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்றம் எனக்கு அளித்துள்ள வரம்பிற்குள் மட்டுமே விசாரணை இருக்கும். நான் நேரடியாக களத்திற்கு சென்று விசாரணை செய்ய முடியாது. சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்வதை நான் கண்காணிப்பேன். அடுத்த கட்ட விசாரணை இரண்டு அல்லது மூன்று வாரத்திற்குள் மீண்டும் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post குடிநீரில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் வேங்கைவயலில் நீதிபதி விசாரணை: 2 மாதத்ததில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் என பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vengaivyal ,Pudukottai ,Venkaiwayal ,Vengaiwayal ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல்-3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நிறைவு..!!