×

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் நடக்கிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அவசியம். அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. 2023-24ம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வை எழுதுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிறு) நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்கிறது.

தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கினாலும், தேர்வர்கள் காலை 11 மணியில் இருந்து தேர்வு மையத்துக்கு வரலாம் என்றும், பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவாயில் பூட்டப்படும் என்றும், 1.30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்து இருக்கிறது. மேலும், தேர்வர்கள் தேர்வு அறைக்குள் செல்லும் போது கையில் ஹால்டிக்கெட் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். தேர்வர்கள் மின் சாதனங்கள், செல்போன் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. அதேபோல் ஷூ, தடிமனான காலணிகள், பெரிய பட்டனுடன் கூடிய ஆடைகள் அணிந்து செல்லவும் அனுமதி இல்லை என்பது போன்ற பல்வேறு அறிவுரைகள் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அறிவுரைகள் அனைத்தையும் தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : NEET ,CHENNAI ,M.B.B.S. ,B.D.S. ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம்...