×

தமிழகத்தில் முதன்முறையாக காஞ்சிபுரம் ரேஷன் கடைகளில் க்யூ ஆர் கோடு அமல்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் துவக்கி வைத்தார்

சென்னை: பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அளவு மட்டுமே அரிசி வாங்கிக் கொண்டு, தேவைக்கு அதிகமாக இருப்பதை விட்டு விட்டாலே, நியாய விலை கடைக்கு வரக்கூடிய அரிசி அளவு குறைய ஆரம்பிக்கும், அதனால் ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறையும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் கூறினார். வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிறு கடைகள் வரை மின்னணு பண பரிமாற்ற முறையை கையாண்டு வருகிறது. அதன்படி அரசுத்துறை நிறுவனங்களான ரேஷன் கடைகளிலும், பணம் இல்லாத கியூ ஆர் கோடு முறையில் மின்னணு பண பரிமாற்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்திலேயே முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தின் கீழ் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் அட்டைதாரர்கள், தாங்கள் வாங்கிய பொருட்களுக்கான தொகையினை கியூ ஆர் கோடு மூலம் மின்னணு பண பரிமாற்றம் மூலம் செலுத்தும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட எம்.பி.எம்பி., நகர் பகுதியில் செயல்படும் ரேஷன் கடையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், பணம் இல்லாத மின்னணு பண பரிமாற்ற திட்டத்தை துவக்கி வைத்தார்.

பின்னர், கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரேஷன் அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் தங்களுக்கு தேவையான அளவு அரிசியை வாங்கிக் கொண்டு, தேவைக்கு அதிகமாக வாங்குவதை விட்டாலே, ரேஷன் கடைக்கு தேவையான அரிசியின் அளவு குறையும். அதனால், அரிசி கடத்தலும் குறையும். தமிழகம் முழுவதும் 22,000 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தும் பணி உள்ளது. அதில், முதல் கட்டமாக 6,500 கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம், ஏப்ரல் மாதம் 3ம் தேதியுடன் முடிந்து விட்டது.

வாக்காளர் பட்டியல் என்பது அடிப்படை உறுப்பினர்கள் பட்டியல். அதனால் உறுப்பினர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று சொல்லி கூட்டுறவு சங்க விதிகளில் திருத்தம் கொண்டு வந்தோம், அதைத்தொடர்ந்து 2 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், உயர் நீதிமன்றமும் உறுப்பினர் பட்டியல் சீர்திருத்தம் முடிந்த பிறகு தேர்தல் நடத்த வேண்டும் என கூறி ஆறு மாதம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த ஆறு மாத காலக்கெடு முடிந்த பிறகு கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் , பதவிக்காலம் முடிந்த கூட்டுறவு சங்கங்களுக்கு சிறப்பு செயலாளர்கள் நியமிக்கப்படுவர் என கூறினார். உடன் காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ , காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிகளின் கூடுதல் பதிவாளர் முருகன், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post தமிழகத்தில் முதன்முறையாக காஞ்சிபுரம் ரேஷன் கடைகளில் க்யூ ஆர் கோடு அமல்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kanchipuram ,Societies ,Chennai ,Co-operative Societies ,Dinakaran ,
× RELATED பொது விநியோகத் திட்டப் பொருட்களை...