×

கம்பீரமாக வாழ்த்துவோம்

மக்கள் தந்த மாபெரும் வெற்றியை பணிவுடன் ஏற்று ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்னும் நான் என்று உணர்வுப்பூர்வமாக உறுதிமொழி எடுத்து, தமிழ்நாடு அரசை வழிநடத்துவதற்கு, முதல்வர் பொறுப்பேற்ற நாள் 7.5.2021. இதன்படி திமுக அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்து, மூன்றாம் ஆண்டில் இன்று காலடி எடுத்து வைக்கிறது. முதல்வராக அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற காலகட்டத்தில், கொரோனா தொற்று கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. அரசு கஜானாவோ, கடன் சுமையில் மூழ்கி கிடந்தது. ஆனாலும் துவண்டு விடாமல், துணிவுடன் களத்தில் இறங்கி கவனம் ஈர்த்தார் முதல்வர்.

ஆட்சிக்கு வந்த கையோடு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4ஆயிரம் கொரோனா கால நிதி வழங்கினார். இது லட்சோபலட்சம் மக்களின் வாட்டத்தை போக்கியது. ஆவின் பால்விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார். அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்று அறிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களின் மருத்துவ செலவை, அரசே ஏற்கும் என்று அறிவித்தார். தமிழ்நாடு அரசின் பொருளாதார சிக்கல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு, டீசல் விலையில் ரூ.3ஐ குறைத்தார். பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், ஆன்மிகம் என்று அனைத்து துறைகளுக்கும், சிறந்த வல்லுநர்களை நியமித்து குழுக்களை அமைத்தார்.

இதுபோன்ற அணுகுமுறைகள் அனைத்தும் பொதுமக்களின் பெருத்த வரவேற்புகளுக்கு மத்தியில், எதிர்க்கட்சிகளையும் வியக்க வைத்துள்ளது. இந்த வகையில், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், நம்மை காக்கும் 48 திட்டம், அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், காலை உணவுத்திட்டம், மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்டம், 2.80 கோடி மரங்கள் நடும் திட்டம், எழுத்தாளர்களுக்கு அரசு வீடு, எண்ணும் எழுத்தும் திட்டம் என்று தொடரும் பட்டியல் மிகவும் நீளமானது. இப்படி அவர் கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தும் கற்றார், கல்லார், கழனியில் உழல்வோர், மாதர், நல்லார், மாணவ மணிகள் என்று அனைவரையும் முன்னேற்றப்பாதையில் செல்ல வைத்துள்ளது.

இதற்கு சான்றாக கல்வி, மருத்துவம், விவசாயம் என்று பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்து, பன்னாட்டு அமைப்புகளின் பாராட்டுகள், ஒன்றிய அரசின் விருதுகளை குவித்துக்கொண்டிருக்கிறது தமிழ் மாநிலம். இவை அனைத்திற்கும் மத்தியில் சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், விமர்சனங்கள் என்று அனைத்தையும் எதிர்கொண்டு, சமூகநீதி என்ற இலக்கில் இருந்து சற்றும் பிறழாமல் சுழன்று கொண்டிருப்பது அரசு இயந்திரத்தின் தனிச்சிறப்பு. மொத்தத்தில் வேதனைக்குரிய கொரோனா உச்சத்தில் களமிறங்கி, மக்களின் கண்ணீரை துடைத்த முதல்வர், சூழ்ந்து நின்ற சோதனைகள் அனைத்தையும் படிக்கட்டுகளாக்கி, சாதனைகளால் மக்கள் மனங்களில் நிறைந்து நிற்கிறார். ‘சொல் அல்ல, அனைத்துமே செயல்’ என்ற கூற்றுக்கு இலக்கணமாக பீடுநடை போடும் தமிழ்நாடு அரசும், அதை திறம்பட வழிநடத்தும் முதல்வரும், தொடர்ந்து முத்தான சாதனைகளால் முத்திரை பதிக்க கரம் கொடுப்போம்…கம்பீரமாக வாழ்த்துவோம்…

The post கம்பீரமாக வாழ்த்துவோம் appeared first on Dinakaran.

Tags : Muthuvel Karunanidhi Stalin ,
× RELATED அண்ணா, கலைஞர் ஆட்சியை போன்றே...