×

ஆசிய இளையோர் தடகளத்தில் 2 பதக்கம் வென்று சாதனை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம்: நெல்லை வந்த மாணவி அபிநயா பேட்டி

நெல்லை: தாஷ்கண்டில் நடந்த ஆசிய 5வது இளையோர் தடகளப் போட்டியில் தொடர் ஓட்டத்தில் தங்கமும், 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் வென்ற நெல்லை மாணவி, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம் என தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் இடிந்தகரையைச் சேர்ந்தவர் அபிநயா (17), வண்ணார்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார். தடகளத்தில் ஆர்வமுள்ள மாணவி அபிநயா, அதற்கான பயிற்சிகளில் முறையாக ஈடுபட்டு வருகிறார். உஸ்பெஸ்கிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடந்த 5வது ஆசிய இளையோர் தடகளப் போட்டியில் இந்திய அணி சார்பில் அவர் பங்கேற்றார். பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும், தொடர் ஓட்டப் போட்டியில் தங்கமும் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவி அபிநயா, நேற்று சென்னையில் இருந்து ரயில் மூலம் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்தார். அவருக்கு பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், முதல்வர் முருகவேல், பள்ளி ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர் மோகன்குமார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு துறை உதவி பேராசிரியர் சேது, நெல்லை மாவட்ட நீச்சல் கழக செயலர் லட்சுமணன், நீச்சல் பயிற்றுநர் கர்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் மாணவி அபிநயா கூறுகையில், ‘‘தாஷ்கண்டில் நடந்த ஆசிய 5வது இளையோர் தடகளப் போட்டியில் தொடர் ஓட்டத்தில் தங்கமும், 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனது பெற்றோரும், பயிற்சியாளரும் அளித்த ஊக்கத்தினால்தான் பதக்கங்களை வெல்ல முடிந்தது. ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதே எனது லட்சியம் என்றார். பேட்டியின் போது பயிற்சியாளர் ரெசிட்டோ ஷேக்ஸ் உடனிருந்தார்.

The post ஆசிய இளையோர் தடகளத்தில் 2 பதக்கம் வென்று சாதனை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம்: நெல்லை வந்த மாணவி அபிநயா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Olympic Olympics ,Asian Years' Adventure ,Tashkand ,Olympics ,Abinaya ,
× RELATED நீர், மோர் பந்தல் திறப்பு