×

மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்த ஒரு தரப்பினர்

சேந்தமங்கலம், மே 6: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றியம் பேளுக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சாமி கும்பிடுவது சம்பந்தமாக இரு சமூகத்தினர் இடையே, கடந்த சில வருடங்களாக பிரச்னை நிலவி வருகிறது. இதனால், பல ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறாமல் உள்ளது. இது சம்பந்தமாக இரு தரப்பினரையும் அழைத்து, நாமக்கல் ஆர்டிஓ தலைமையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை. இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ஒரு தரப்பினர் கோயில் தங்களுக்கு தான் சொந்தம் என்றும், மற்றொரு தரப்பினர் கோயிலுக்குள் தங்களை சாமி கும்பிட அனுமதிக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளனர். இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் ஒரு தரப்பினர் கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்தப் போவதாக அறிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 15 நாட்களாக கோயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று, சித்ரா பவுர்ணமி என்பதால், ஒரு தரப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் திடீரென கோயிலுக்குள் நுழைந்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் போலீசார், அங்கு சென்று கோயிலுக்குள் நுழைந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனிடையே மற்றொரு தரப்பினரும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி கலைச்செல்வன், நாமக்கல் ஆர்டிஓ பிரபாகரன், ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இரு தரப்பினரையும் தனித்தனியாக அழைத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வரும் வரை, இரு தரப்பினரும் கோயிலுக்குள் நுழையக்கூடாது. பூசாரி மட்டும் பூஜைகளை கவனிக்க வேண்டுமென தெரிவித்தனர். இதையடுத்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர். மோதல் சூழ்நிலை நிலவுவதால், கோயில் வளாகத்தில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post மாரியம்மன் கோயிலுக்குள் நுழைந்த ஒரு தரப்பினர் appeared first on Dinakaran.

Tags : Mariamman ,Senthamangalam ,Namakkal District ,Senthamangalam Union Pelukurichi ,
× RELATED ஆம்புலன்சை கடத்திச் சென்ற போதை வாலிபர்