×

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாரியூர் கடலில் வலைவீசும் படலம்

சாயல்குடி, மே 6: சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாரியூர் கடலில் திருவிளையாடல் புராணத்தில் வரக்கூடிய சிவன், பார்வதிதேவியை மணக்கும் வலை வீசும் படலம் மற்றும் திருக்கல்யாணம் கோலகலமாக நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மாரியூர் பவளநிறவள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயிலில் சித்திரை திருவிழா ஏப். 26 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் அம்பாள், சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபராதனை நடந்தது. இரவில் உற்சவமூர்த்தி வலம் வந்தது. சித்திரை பவுர்ணமியான நேற்று மாரியூர் கடலில் மீனவராக வேடமிட்ட சிவப்பெருமான், திமிங்கலம் உருவத்தை அடக்கி பார்வதிதேவியை மணக்கும் திருவிளையாடல் புராணத்தில் வரக்கூடிய வலை வீசும் படலம் நடந்தது.

பிறகு கோயில் மண்டபத்தில் யாகசாலை பூஜை, வேதமந்திரங்களுடன் பூவேந்தியநாதருக்கும், பவளநிறவள்ளியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. பிறகு அம்பாளுக்கு பொன்ஊச்சல் வைபம் நடந்தது. இதனை பெண்கள், குழந்தைகள் காணிக்கையிட்டு ஊஞ்சல் ஆட்டி மகிழ்ந்தனர். விழாவிற்கு ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் பழனிவேல்பாண்டியன் தலைமை வகித்தார். ஏற்பாடுகளை செயல்அலுவலர் விக்னேஷ்வரன், கடலாடி, மாரியூர் பிரதோச கமிட்டியாளர்களும் செய்திருந்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து நடந்தது. இதில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாரியூர் கடலில் வலைவீசும் படலம் appeared first on Dinakaran.

Tags : Mariyur ,Chitrai festival ,Chayalgudi ,Shiva ,Thiruvilayadal Purana ,Parvati Devi ,
× RELATED சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாரியூர் கடலில் வலைவீசும் படலம் கோலாகலம்