×

சுயமரியாதை திருமணம் சான்று வழங்க வக்கீலுக்கு அதிகாரமில்லை: பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை பரிந்துரை

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்பண்ணையைச் சேர்ந்த இளவரசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பட்டதாரியான நான், எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளேன். கடந்த 2018ல் அவர் மைனராக இருந்தபோது என் மனைவியின் பெற்றோர் குழந்தை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார். இதன்பிறகு அதிகாரிகளிடம் அளித்த வாக்குறுதியை மீறி, உறவினருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறி, 24.4.2023ல் என்னை திருப்பூரில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்த என் மனைவியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கட்டாயப்படுத்தி கடத்தி சென்று, சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளனர். எனவே, என் மனைவியை கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர்.விஜயகுமார், ‘‘இந்த வழக்கில் மனுதாரருக்கு சுயமரியாதை திருமணம் நடந்ததாக வக்கீல் சான்று அளித்துள்ளார்.

வக்கீல் முன் நடந்த திருமணம் செல்லாது என ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு சுயமரியாதை திருமணம் தனது முன்னிலையில் நடந்ததாக சான்று அளித்த வக்கீல் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் தரப்பில் நோட்டீஸ் அளித்து, விளக்கம் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் வேறு எங்கும் திருமணம் நடந்ததாக யாராவது சான்றிதழ் வழங்கினால் அவர்களுக்கும் நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

The post சுயமரியாதை திருமணம் சான்று வழங்க வக்கீலுக்கு அதிகாரமில்லை: பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Bar Council ,Madurai ,Morpannai ,RS Mangalam, Ramanathapuram district ,ICourt ,Dinakaran ,
× RELATED வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார்...