பெங்களூரு: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள் சால்வைகள் உள்ளிட்டவைகளை அவரின் வாரிசான தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெங்களூரு நீதிமன்றத்தில் அவரது தரப்பில் வாதம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முதல்வராக கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா இருந்தபோது, அவர் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுன்ஹா வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள், காலணிகள், சால்வைகள் உள்ளிட்ட அழியும் பொருட்களை விரைவில் ஏலம் விட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து கடந்த மாதம் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட வக்கீல் கிரண் எஸ்.ஐவளியை அரசு தரப்பு வக்கீலாக கர்நாடக அரசு நியமனம் செய்தது. அரசு தரப்பு வக்கீல் நியமனம் செய்யப்பட்ட பிறகு நேற்று இந்த வழக்கு பெங்களூரு மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி எச்ஏ மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தரப்பில் வக்கீல் சத்திய குமார் ஆஜராகி வாதிடும்போது, ‘‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு ஜெ.தீபா என்று சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளது. ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சொத்துக்களும் அவரது வாரிசான தீபாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்’’ என்றார். சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் வாரிசுகளுக்கு சேராது என கருத்து தெரிவித்த நீதிபதி, தீபா தரப்பு வக்கீலை உரிய முறையில் மனு தாக்கல் செய்து வாதிட உத்தரவு பிறப்பித்தார்.
இதன் பிறகு ஆர்.டி.ஐ.ஆர்வலர் நரசிம்மமூர்த்தியை பார்த்து ஜெயலலிதாவின் பல பொருட்கள் அரசு கருவூலத்தில் இல்லை என்று நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் ஜெயலலிதாவிடம் இருந்து முக்கியமான பொருட்கள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள பொருட்கள் பட்டியலில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனிடையே பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருள் பட்டியல் குறித்து தான் மேல்முறையீடு செய்து தகவல்களை பெற உள்ளதாக நரசிம்மமூர்த்தி தெரிவித்தார்.
The post ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்: பெங்களூரு நீதிமன்றத்தில் தீபா முறையீடு appeared first on Dinakaran.

