×

சென்னை விமான நிலையத்தில் விமான டிக்கெட்டுடன் வசூலிக்கும் மேம்பாட்டு கட்டணம் உயர்வு

சென்னை: இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு, அந்தந்த விமான நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கு தகுந்தப்படி விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே, உள்நாட்டு விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும், ரூ.205, சர்வதேச விமான பயணி ஒவ்வொருவருக்கும் ரூ.300 என வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணத்தை, ஒன்றிய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம், மாற்றி அமைத்துள்ளது. அதன்படி உள்நாட்டு விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.295, சர்வதேச விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் ரூ.450 வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் பயணிகளிடம் தனியாக வசூலிக்கப்பட மாட்டாது. அவர்கள் பயணிக்கும் விமான டிக்கெட் கட்டணத்துடன் இணைத்து வசூலிக்கப்படும். பின்னர் அந்தந்த விமான நிறுவனங்கள், பயணிகளிடம் வசூலித்த விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும். இந்த கட்டணம், பயணி புறப்படும் விமான நிலையத்தில் மட்டும் வசூலிக்கப்படும். இந்த கட்டண உயர்வு சென்னை விமான நிலையத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், அந்தந்த விமான நிலையங்களில், பயணிகளுக்கு இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தகுந்தாற்போல் மாறுபட்டு இருக்கும்.

The post சென்னை விமான நிலையத்தில் விமான டிக்கெட்டுடன் வசூலிக்கும் மேம்பாட்டு கட்டணம் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,India ,
× RELATED பூதலூர் வட்டம் புதுக்குடியில் ரூ.50 கோடியில் கால்நடை தீவன தொழிற்சாலை