×

மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை வைபவம் பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் அழகர்: கொட்டும் மழையிலும் லட்சக்கணக்கானோர் தரிசனம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என கோஷமிட தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்திய அழகர் காலை 5.52 மணியளவில் வைகையில் இறங்கினார். இந்த நிகழ்வைக் காண சுமார் 10 லட்சம் பக்தர்கள் கொட்டும் மழையிலும் குவிந்தனர். பழம்பெருமை மிக்க மதுரையில் நடக்கும் மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றவை. கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா தொடங்கி, மே 2ல் திருக்கல்யாணம், 3ம் தேதி தேரோட்டம், நேற்று தீர்த்தவாரி, தேவேந்திர பூஜை என திருவிழா நிறைவு பெற்றது. மதுரை அருகே, அழகர் மலையில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கடந்த மே 1ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கவும், வைகை ஆற்றில் இறங்கவும் சுந்தராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு, அழகர்மலையிலிருந்து கடந்த 3ம் தேதி தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

வரும் வழியில் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் ஆகிய இடங்களை கடந்து, நேற்று காலை மூன்றுமாவடி வந்தார். அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர் வேடம் தரித்த ஏராளமான பக்தர்கள் கள்ளழகரை எதிர் கொண்டு வர்ணனை பாடல்கள் பாடி வணங்கினர். தோல் பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்து ஆடிப்பாடி வரவேற்றனர். அதைத் தொடர்ந்து புதூர், ரேஸ்கோர்ஸ் காலனி, ரிசர்வ் லைன், தல்லாகுளம் உள்ளிட்ட 480க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு கள்ளழகர் வந்தார். நள்ளிரவு 12 மணியளவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஆண்டாள் மாலை இதையடுத்து விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகருக்கு சூட்டப்பட்டது.

இன்று அதிகாலை 2.30 மணிக்கு மேல் கள்ளழகர், தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதையடுத்து அதிகாலை 3 மணி அளவில் தங்கக்குதிரையில் அமர்ந்தபடி, ஆயிரம் பொன்சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு கள்ளழகர் புறப்பட்டார். ஆற்றில் இறங்கினார் அழகர் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இதனால், ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வைக் காண கொட்டும் மழையிலும் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதல் வைகை ஆற்றில் குவிந்தனர். தல்லாகுளத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ஆழ்வார்புரம் பகுதி வைகை ஆற்றுக்கு கள்ளழகர் வந்தார். முன்னதாக கள்ளழகரை வரவேற்க, இன்று அதிகாலை 4 மணிக்கு தெற்குவாசல் கோயிலிலிருந்து வீரராகவப் பெருமாள் வெள்ளிக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு வந்து மண்டகப்படியில் தங்கி இருந்தார். அவர், ஆற்றுக்கு வந்த கள்ளழகரை வரவேற்று 3 முறை வலம் வந்தார்.

சரியாக காலை 5.52 மணிக்கு வளமையும், செழுமையும் நிலைக்க தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் ‘பச்சைப் பட்டு’ உடுத்தி வைகையாற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது. சர்க்கரை நிரப்பிய செம்புகளில் தீபம் ஏற்றி கள்ளழகருக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இந்த நிகழ்வை கண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம் அடைந்தனர். வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகை ஆற்றிலிருந்து காலை 7.21 மணிக்கு அழகர் புறப்பட்டு ராமராயர் மண்டபம் சென்றடைந்தார். அங்கு மதியம் 12 மணியளவில் கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. இன்று இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். பின்னர், நாளை காலை 6 மணிக்கு கள்ளழகர் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் உலா வருகிறார்.

அதன்பின் சேஷ வாகனத்தில் 11 மணிக்கு புறப்பட்டு, தேனூர் மண்டபத்தை அடைகிறார். பிற்பகல் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். மாலை 3.30 மணிக்கு அனுமார் கோயிலுக்கு கள்ளழகர் வருகிறார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடக்கிறது.
தசாவதார நிகழ்ச்சி நாளை இரவு மீண்டும் ராமராயர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு 11 மணிக்கு திருமஞ்சனமாகி விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி அதிகாலை 6 மணிக்கு மோகனாவதாரத்தில் வீதி உலா வருகிறார். அன்று பகல் 2 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார்.

8ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி பூப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். அதே திருக்கோலத்தில் கருப்பணசாமி கோயிலில் இருந்து கள்ளழகர் மலைக்கு புறப்படுகிறார். பின்னர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 9ம் தேதி மதியம் 10.32 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் இருப்பிடம் அடைகிறார். மே 10ம் தேதி காலை உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவத்தையொட்டி மதுரையில் போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை வைபவம் பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் அழகர்: கொட்டும் மழையிலும் லட்சக்கணக்கானோர் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Madurai Sitra festival ,Madurai ,Madurai Sitrishra festival ,Beadhakar Vaigai River ,Madurai Chitra ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை