×

பல ஏவுகணை திட்டத்தில் பணியாற்றி உயரிய விருதுகளை பெற்ற நிலையில் பாக். உளவுத்துறைக்கு ரகசிய தகவலை பகிர்ந்த மூத்த விஞ்ஞானி கைது: மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை அதிரடி

மும்பை: பல ஏவுகணை திட்டத்தில் பணியாற்றி உயரிய விருதுகளை பெற்ற நிலையில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் அனுப்பிய டிஆர்டிஓ மூத்த விஞ்ஞானி குருல்கரை மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிரடியாக கைது செய்துள்ளது. ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் பணியாற்றி வந்த மூத்த விஞ்ஞானி பிரதீப் குருல்கர் என்பவரை, மகாராஷ்டிரா மாநில அரசின் பயங்கரவாத எதிர்ப்புப் படை பிரிவு (ஏடிஎஸ்) போலீசார் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு நாட்டின் ரகசிய தகவல்களை பகிர்ந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை வட்டாரங்கள் கூறுகையில், ‘பாகிஸ்தானின் இன்டர்-சர்வீஸ் உளவுத்துறையின் ஏஜென்டுகளுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) பணியாற்றி வந்த மூத்த விஞ்ஞானி பி.எம்.குருல்கர் மூலம் சில ரகசிய தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. டிஆர்டிஓவின் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் ஆய்வகமான ஆர் அண்ட் டி எஸ்டாபிளிஷ்மென்ட் (பொறியாளர்கள்) இயக்குனராக குருல்கர் பணியாற்றி வந்தார்.

வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஏஜென்டுகளுடன் தொடர்பில் இருந்தார். அவரை இந்திய, மாநில உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்தது. பாதுகாப்பு முக்கியத்துவம் சில தகவல்களை அவர் பாகிஸ்தான் ஏஜென்டுகளுக்கு அனுப்பி உள்ளார். அதனால் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை புனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இம்மாதம் 9ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உள்ளோம். இவரது சிறந்த பணிக்காக 2000ம் ஆண்டில் அறிவியல் தின விருதும், 2002ம் ஆண்டில் தன்னம்பிக்கையில் சிறந்து விளங்கியதற்காக டிஆர்டிஓ அக்னி விருதும், 2008ம் ஆண்டில் ஆகாஷிற்கு டிஆர்டிஓ விருதும், சிறந்த தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான டிஆர்டிஓ விருதும், செயல்திறன் சிறப்பிற்கான டிஆர்டிஓ விருதும், 2016ல் டெமாவின் சிறந்த தொழில்நுட்பத்திற்கான விருதும் பெற்றிருந்தார்.

கடந்த 1985ம் ஆண்டு புனேயில் உள்ள சிஓஇபி-யில் மின்பொறியியல் பட்டம் பெற்ற குருல்கர், 1988ம் ஆண்டு ஆவடியில் உள்ள சிவிஆர்டிஇ-யில் பணியில் சேர்ந்தார். டிஆர்டிஓவின் பல ஏவுகணை திட்டங்களில் கைதான குருல்கர் மீது அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை அறிந்திருந்தும், எதிரி நாட்டிற்கு விவரங்களை அளித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையின் கலாசவுகி பிரிவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத எதிர்ப்புப் படை பிரிவு பிரதீப் குருல்கருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. போலீஸ் காவலில் உள்ள அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

The post பல ஏவுகணை திட்டத்தில் பணியாற்றி உயரிய விருதுகளை பெற்ற நிலையில் பாக். உளவுத்துறைக்கு ரகசிய தகவலை பகிர்ந்த மூத்த விஞ்ஞானி கைது: மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Bach ,Maharashtra Anti-Terrorism Force Action ,Mumbai ,Trto ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!