×

வாகனங்களை நிறுத்த காவல்துறை அனுமதி மறுப்பதால் தாவரவியல் பூங்கா சாலையில் வாகன நெரிசல்

ஊட்டி : ஊட்டி என்சிஎம்எஸ் பார்க்கிங் தளத்தில் வாகனங்களை நிறுத்த காவல்துறையினர் அனுமதிக்க மறுப்பதால் தாவரவியல் பூங்கா சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால், இங்குள்ள சுற்றுலா தளங்களில் கூட்டம் காணப்படுகிறது.

கோவை, ஈரோடு மற்றும் பாலக்காடு போன்ற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி – குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை வழியாகவே வருகின்றனர். கேரளாவின் வயநாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து வர கூடியவர்கள் கூடலூர் வழியாக ஊட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாத இறுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட பன்மடங்கு அதிகரித்த நிலையில் ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் பொதுமக்களும் கடும் பாதிப்படைந்தனர். அதன்பின், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை நடைமுறைப்படுத்தியது. ஊட்டி நகரில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, ஊட்டி – குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாகவும், ஊட்டியில் இருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன. குன்னூர் வழியாக வரும் அனைத்து ஆம்னி பஸ், டெம்போ டிராவலர் வாகனங்களும் ஆவின் பார்க்கிங் தளத்தில் நிறுத்தப்படுகின்றன.

கூடலூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் நகருக்குள் அனுமதிக்காமல் காந்திநகர் மஞ்சக்கொரை வழியாக திருப்பி விடப்படுகின்றன. கூடலூரில் இருந்து வரும் வாகனங்கள் பிங்கர்போஸ்ட் கால்ப் கிளப் சாலையில் நிறுத்தப்படுகின்றன. பின்னர், போக்குவரத்து கழகத்தின் சர்க்கியூட் பஸ்கள் மூலம் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றன. இதனிடையே, சுற்றுலா பயணிகளின் கார்கள் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த வாகனங்களை நிறுத்தி கொள்ள தாவரவியல் பூங்கா அருகே பீரிக்ஸ் பார்க்கிங், அசெம்பிளி ரூம் பார்க்கிங், என்சிஎம்எஸ்., பார்க்கிங் உள்ளிட்டவைகள் உள்ளன.

இந்நிலையில், தற்போது அதிகளவிலான வாகனங்கள் தாவரவியல் பூங்கா சாலையில் சென்று வரும் நிலையில், இந்த சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள என்சிஎம்எஸ் பார்க்கிங் தளத்தில் 300 கார்கள், 100 ஆம்னி பஸ்கள், வேன்கள் நிறுத்த வசதி உள்ளது. இந்த சூழலில் இங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடும் போலீசார், எச்சிஎம்ஸ்., பார்க்கிங் தளத்திற்கு வாகனங்களை அனுமதிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

அனைத்து வாகனங்களையும் அசெம்பிளி ரூம்ஸ் பார்க்கிங் நோக்கி அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது. இதனால், என்சிஎம்எஸ் பார்க்கிங் தளத்தில் அதிக வாகனங்கள் நிறுத்த வசதி இருந்தும் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே, காவல்துறை உரிய கவனம் செலுத்தி தாவரவியல் பூங்கா சாலையில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க என்சிஎம்எஸ்., பார்க்கிங் தளத்திலும் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது, வார இறுதி நாட்களில் பன்மடங்கு கூட்டம் அலைமோதும் சூழலில் வார நாட்களில் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. எனவே, ஆம்னி பஸ் போன்ற கனரக வாகனங்களை தவிர பிற மேக்ஸ் கேப் மற்றும் டெம்போ வாகனங்களை வார நாட்களில் மட்டும் நகருக்குள் அனுமதிக்கவும் வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post வாகனங்களை நிறுத்த காவல்துறை அனுமதி மறுப்பதால் தாவரவியல் பூங்கா சாலையில் வாகன நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Botanical Park Road ,NCMS ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு