×

லண்டன் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டதால் ஜம்மு கட்சித்தலைவர் மகன் இந்தியா வர 3 மாத விசா

ஜம்மு: லண்டன் தூதரக தாக்குதலில் ஈடுபட்ட ஜம்மு கட்சித்தலைவர் பீம் சிங்கின் மகன் பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்டதையடுத்து அவர் இந்தியா வருவதற்கு அவசர விசா வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சியின்(ஜேகேஎன்பிபி) நிறுவனர் மறைந்த பீம் சிங்கின் மகன் அங்கித் லோவ்(39). இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் ஆர்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அங்கித் தூதரகத்தின் மீது முட்டைகள், கற்களை வீசி தாக்கினார். இதையடுத்து அங்கித் உள்ளிட்ட பலரை இந்திய அரசு கருப்பு பட்டியலில் சேர்த்தது. இந்நிலையில் அங்கித்தின் தாயார் ஜெய்மாலா(64) கடந்த மாதம் 26ம் தேதி ஜம்முவில் இறந்தார்.

தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அங்கித் விசாவுக்கு விண்ணப்பித்தார். அவர் பெயர் கருப்பு பட்டியலில் இருந்ததால் அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா வர தனக்கு விசா வழங்குமாறு பிரதமர் மோடிக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தூதரக தாக்குதல் சம்பவத்துக்கு அவர் மன்னிப்பும் கோரினார். இதை தொடர்ந்து அங்கித் இந்தியா வருவதற்கு 3 மாத அவசர விசாவை இந்திய தூதரகம் வழங்கியுள்ளது. அங்கித்தின் தாயார் உடல் ஜம்மு அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனை பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பரில் பீம் சிங் இறந்த போதும் அவரது இறுதி சடங்கிலும் அங்கித்தால் பங்கேற்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post லண்டன் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டதால் ஜம்மு கட்சித்தலைவர் மகன் இந்தியா வர 3 மாத விசா appeared first on Dinakaran.

Tags : Jammu ,India ,London ,Partyman Bim Singh ,embassy attack ,Modi ,Dinakaran ,
× RELATED 370வது பிரிவு ரத்துக்கு எதிரான மறுஆய்வு...